பிபிசி -யின் 100 சிறந்த பெண்கள் பட்டியலில் தமிழ் பாடகி
பிபிசி -யின் 100 சிறந்த பெண்கள் பட்டியலில் தமிழ் பாடகி
பி பி சி-யின் 100 சிறந்த பெண்கள் பட்டியலில் இடம் பிடித்த தமிழ் பெண் கானா பாடகி இசை வாணி
சமூகத்திற்கு மகத்தான பங்களிப்பை வழங்கும் பெண்களை கவுரவிக்கும் விதமாக ஒவ்வொரு வருடமும் பிபிசி செய்தி நிறுவனம் சிறந்த பெண்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இந்த வருடம் இடம் பிடித்த 100 பெண்களில் 4 பேர் இந்திய பெண்கள். அதில், இசைவாணி தமிழகத்தை சேர்ந்த பெண் என்பது குறிப்பிடத்தக்கது. அதுவும் அறிவாற்றல், படைப்பாற்றல், தலைமைத்துவம், அடையாளம் ஆகிய பிரிவுகளில், படைப்பாற்றல் பிரிவில் இடம்பிடித்த 21 பெண்களில் இசைவாணி மட்டுமே இந்தியர்.
பருவநிலை செயற்பாட்டாளர் ரிதிமா பாண்டே, தடகள வீராங்கனை மானஷி ஜோஷி, போராளி பில்கிஸ் பானோ என மற்ற மூவரும் வெவ்வேறு துறையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்.
கடந்த 2017 ஆம் ஆண்டு இயக்குநர் பா.ரஞ்சித் நீலம் பண்பாட்டு மையத்தின் மூலம் தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ் இசைக்குழுவை ஆரம்பித்தார். அக்குழுவில் இடம்பிடித்த 20 ஆண் பாடகர்களில் இடம்பிடித்த ஒரே பெண் கானா பாடகர் இசைவாணிதான்.
வடசென்னையை சேர்ந்த இசைவாணிதான் பிபிசி சிறந்த பெண்கள் பட்டியலில் இடம்பிடித்து தமிழகத்திற்கே பெருமை சேர்த்துள்ளார். ப்ளஸ் டூ-வோடு படிப்பை நிறுத்திய இசைவாணி, இன்று பிபிசியின் சிறந்த பெண்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.
எந்த மேடையில் தோன்றினாலும் அடுத்த நொடியே டைமிங், ரைமிங்கோடு கானா பாடல்களைப் பாடி ஆச்சர்யப்படுத்துவதில் வல்லவர் இசைவாணி. இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் நடுவராக பங்குபெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இசைவாணி நாடோடிகள் 2, ஜெயில், அசால்ட்டு உள்ளிட்ட படங்களிலும் பாடல்களை பாடியுள்ளார். தனது குரலை பாடல்களோடு நிறுத்திக்கொள்ளவில்லை
தற்போது பிபிசி பெண்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளதால், இசைவாணியை அறிமுகப்படுத்திய இயக்குநர் பா.ரஞ்சித் நெகிழ்ச்சியுடன் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.