உதயநிதி ஸ்டாலின் இரவு பதினொரு மணிக்கு விடுதலை செய்யப்பட்டார்
உதயநிதி ஸ்டாலின் இரவு பதினொரு மணிக்கு விடுதலை செய்யப்பட்டார்
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் கைது செய்யப்பட்ட திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இரவு 11 மணிக்கு மேல் விடுவிக்கப்பட்டார்.
தாம் செல்லும் இடங்களிலெல்லாம் கட்டுங்கடங்காத கூட்டம் திரள்வதை பார்த்து அதிமுகவினருக்கு கண் உறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
பிரச்சார பயணத்தை பொறுத்தவரை பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை என்றும் தொடர்ந்து தனது பயண நிகழ்ச்சிகள் தொடரும் எனவும் அவர் உறுதிபடக் கூறியுள்ளார்.
விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற தலைப்பில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று திருக்குவளையில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் உதயநிதி ஸ்டாலின்.

அன்றிலிருந்து தொடர்ச்சியாக அடுத்தடுத்து 3 தினங்களும் அவர் கைது செய்யப்பட்டார். முதல் நாள் திருக்குவளையில் கைது செய்த போலீஸ் அடுத்த நாள் நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டையில் உதயநிதியை கைது செய்தது. நேற்று மூன்றாவது நாளாக மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் கைது செய்தது.
நேற்று பிற்பகல் 2 மணியளவில் கைது செய்யப்பட்ட உதயநிதி ஸ்டாலின் இரவு 11 மணி வரை விடுவிக்கப்படவில்லை. இதனால் குத்தாலத்தில் பதற்றம் அதிகரித்தது. உதயநிதி தங்கவைக்கப்பட்டிருந்த திருமண மண்டபம் முன்பு ஆயிரக்கணக்கான திமுகவினர் குவியத் தொடங்கினர். கோவையில் பாஜக வேல் யாத்திரையில் 6,000 பேருக்கு அனுமதி வழங்கியதை சுட்டிக்காட்டி கோவைக்கு ஒரு நியாயம்? குத்தாலத்துக்கு ஒரு நியாமா? என முழக்கம் எழுப்பத் தொடங்கினர்.
இது குறித்த தகவல் நிமிடத்துக்கு நிமிடம் போலீஸ் உயரதிகாரிகளுக்கு சென்று கொண்டே இருந்தது. இதன் பிறகு இரவு 11 மணிக்கு மேல் உதயநிதியை விடுவித்தது போலீஸ். அப்போது உற்சாகம் பொங்க செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி, ஒரு போதும் தனது பிரச்சார நிகழ்ச்சிகளை கைவிடமாட்டேன் என உறுதிபடக் கூறினார். மேலும், மணி இரவு 11 -ஐ கடந்துவிட்ட போதும் தமக்காக இன்னும் 4 இடங்களில் கட்சியினரும், மக்களும் காத்திருப்பதால் அவர்களை சந்தித்துவிட்டுத்தான் விடுதி அறைக்கு திரும்புவேன் எனத் தெரிவித்தார்.
உதயநிதி ஸ்டாலின் மேற்கொண்டு வரும் பிரச்சார பயணம் திமுகவினர் மத்தியில் பெரிய எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிலும், குறிப்பாக அவர் மீதான கைது நடவடிக்கை மக்கள் மத்தியில் அவருக்கு கூடுதல் கவனத்தை பெற்றுக்கொடுத்திருக்கிறது.