*ஹோட்டல் ஸ்டைலில் கொத்தமல்லி சட்னி: சிம்பிளாக இப்படிச் செய்யலாம்*
கொத்தமல்லி இலை, உடல் நலத்திற்கு மிகவும் தேவையானது. குறிப்பாக ரத்த அழுத்தத்தை சீராக்குவது, பித்தம் தொடர்பான பிரச்னைகளுக்கு இது உகந்தது என்கிறார்கள். தவிர, கொத்தமல்லி இலை மூலமாக செய்யப்படும் ரசம், துவையல் ஆகியன டேஸ்டாகவும் இருக்கும்.
வீட்டுக்கு அருகே மளிகைக் கடையில் எப்போதும் கிடைக்கும் பொருளாக கொத்தமல்லி இலை இருக்கிறது. இந்தத் தழைகளை பயன்படுத்தி சட்னி தயார் செய்வது எப்படி எனப் பார்க்கலாம்.
கொத்தமல்லி சட்னி தயாரிக்க தேவையான பொருட்கள்: கொத்தமல்லி – 1 கட்டு, வெங்காயம் – 2, தக்காளி – 1, மிளகாய் – 5, தேங்காய் – 1/2 கப் (துருவியது), உளுந்தம் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன், கடலைப் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன், பூண்டு – 2 பற்கள், இஞ்சி – 1 துண்டு, புளி – சுண்டைக்காய் அளவு, உப்பு – தேவையான அளவு, எண்ணெய் – தேவையான அளவு
கொத்தமல்லி சட்னி செய்முறை வருமாறு:
கொத்தமல்லி தழையில் இலைகளை ஆய்ந்து, நீரில் அலசிக்கொள்ளுங்கள். வெங்காயம், தக்காளி ஆகியவற்றை நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு வாணலியை சூடாக்கி, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உளுந்தம் பருப்பு மற்றும் கடலைப் பருப்பு, வரமிளகாயினை போட்டு வதக்கவும்.இவை மூன்றும் சிவந்ததும், கொத்தமல்லி இலையினை போட்டு வதக்குங்கள்.
அடுத்து நறுக்கி வைத்துள்ள வெங்காயம், தக்காளி, உப்பு, ஒரு துண்டு இஞ்சி, பூண்டு பற்கள், புளியினை போட்டு நன்கு வதக்கவும். பின்னர் துருவிய தேங்காய் சேர்த்து அடுப்பில் இருந்து இறக்கிவிடுங்கள். இது ஆறியதும் மிக்ஸியில் போட்டு அரைத்தால் சுவையான கொத்தமல்லி சட்னி தயார். ரொம்பக் கூழாக அரைக்காமல் இருந்தால், கொத்தமல்லி சட்னி சாப்பிடும் பதத்தில் இருக்கும்.
ஹோட்டல் ஸ்டைலில் இப்படி செய்து மகிழுங்கள் மக்களே!