வருண் சக்கரவர்த்தி மாயாஜால பந்துவீச்சில் KKR வெற்றி.
வருண் சக்கரவர்த்தி மாயாஜால பந்துவீச்சில் KKR வெற்றி.
விக்கெட் சக்ரவர்த்தி… வருணின் மாயாஜாலத்தில் வீழ்ந்த டெல்லி! #KKRvDC
முதலில் அற்புதமாகப் பந்து வீசி, 7.2 ஓவரிலேயே 3 விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டிய டெல்லி, தொடர்ந்து அந்த மொமன்டத்தைத் தக்க வைத்துக் கொள்ளத் தவறியது. ராணா – நரைன் கூட்டணியிடம் மொத்தமாய் அவர்கள் சரணடைந்து விட்டார்கள் என்றே சொல்ல வேண்டும். 53 பந்துகளில் 81 ரன்களை விளாசிய ராணா, ஓப்பனர் எப்படி ஆட வேண்டும் என்பதற்கு இலக்கணம் எழுதிச் சென்று விட்டார். அஷ்வின், தேஷ்பாண்டே பந்துகள் மிகவும் அடி வாங்க, ஸ்டோய்னிஸையும், கொல்கத்தா சுற்றலில் விட, ரபாடாவால் கூட வழக்கம் போல ரணகளப்படுத்த முடியாமல் போக நார்க்கியாவுக்கு மட்டும்தான் கொஞ்சம் மட்டுப்பட்டார்கள் என்று சொல்ல வேண்டும். இதில் குறைவான ரன்களையே கொடுத்திருந்தும் அக்ஸர் பட்டேலை ஏன் ஒரு ஓவருக்கு மேல் பயன்படுத்தவில்லை என்பது ஷ்ரேயாஸுக்கே வெளிச்சம்.
அடுத்தடுத்த இரண்டு சதங்களை அடித்து மரண ஃபார்மில் இருக்கும் தவானும், இந்த சீசனில் இதற்கு முந்தைய கொல்கத்தாவுடனான போட்டியில், 38 பந்துகளில் 88 ரன்களைக் குவித்த ஷ்ரேயாஸும் டெல்லியில் இருந்து நம்பிக்கை அளித்தாலும், 195 என்பது கடினமான இலக்காகவே பார்க்கப்பட்டது.
போட்டியில் வென்று புள்ளிப் பட்டியலின் முதல் இடத்திற்கு முன்னேறும் முனைப்புடன் களமிறங்கிய டெல்லிக்கு, ஓப்பனிங் இடத்திற்கு வாஸ்து சரியில்லை போலும். பிரித்விக்குப் பதிலாக களமிறக்கப்பட்ட ரஹானே முதல் பந்திலேயே, கமின்சால் வீழ்த்தப்பட்டு, கோல்டன் டக் ஆக, டெல்லியின் கோட்டையில் முதல் கீறல் விழுந்தது. தொடரின் முதல் பாதியில் ரஹானேவுக்கான வாய்ப்புகள் தொடர்ந்து மறுக்கப்பட, எழுந்த விமர்சனங்களுக்குப் பணிந்து டெல்லி ரஹானேக்கு வாய்ப்பளித்தது. ஆனால் அதைப் பயன்படுத்திக் கொள்ளாத ரஹானே நான்கு போட்டிகளில் வெறும் 25 ரன்களை மட்டுமே எடுத்து தொடர்ந்து ஏமாற்றி வருகிறார். வாழ்ந்து கெட்ட மனிதரான அவரது ஃபார்ம் மகா கவலைக்கிடமாக உள்ளது. ரஹானேவுக்கு அடுத்து உள்ளே வந்த ஷ்ரேயாஸ், தவானுடன் கை கோக்க, “இவர்கள் போதும், எட்ட முடியாத இலக்கு என்று எதுவுமே இல்லை!” என டெல்லி ரசிகர்கள் நிமிர்ந்து உட்கார்ந்த அடுத்த நிமிடமே, மூன்றாவது ஓவரில் மறுபடியும் கமின்சின் ஒரு அற்புதமான பந்தில் தவான் ஆட்டமிழந்து, ரசிகர்களின் இதயத்தில் இன்னொரு ஈட்டியைப் பாய்ச்சினார்.