ராஜராஜ சோழன் சதய விழா: குறைந்த அளவு பக்தர்களை அனுமதிக்க முடிவு
தஞ்சாவூர் பெரிய கோயில் சதய விழாக் குழுத் தலைவர் துரை.திருஞானம் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
மாமன்னன் ராஜராஜ சோழனின் 1035-வது சதய விழா வரும் 26-ம் தேதி நடைபெற உள்ளது.
வழக்கமாக இடம்பெறும் கலைநிகழ்ச்சிகள், கருத்தரங்குகள், வீதியுலா ஏதுமின்றி 2 நாள் நடைபெறும் விழா ஒரு நாள் மட்டுமே இந்தாண்டு கொண்டாடப்பட உள்ளது. அதன்படி வரும் 26-ம் தேதி காலை 6 மணிக்கு மங்கள இசையுடன் விழா தொடங்குகிறது. காலை 6.30 மணிக்கு கோயில் பணியாளர்களுக்கு புத்தாடை வழங்குதல் நடைபெற உள்ளது.
காலை 9.15 மணிக்கு பெருவுடையார், பெரியநாயகி அம்மனுக்கு பேரபிஷேகம், மதியம் 1 மணிக்கு தீபாராதனை ஆகியவை தருமபுரம் ஆதீனம் மடம் சார்பில் நடைபெற உள்ளது. தொடர்ந்து இரவு 8 மணிக்கு சுவாமி புறப்பாடு கோயில் உள்பிரகார வளாகத்தில் நடைபெற உள்ளது. சமூக இடைவெளியுடன் குறைந்த அளவில் பக்தர்களை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே, சதய விழாக் குழு உறுப்பினர்கள் காந்தி, அறிவுடைநம்பி, புண்ணியமூர்த்தி, ரமேஷ், பண்டரிநாதன், அறநிலையத் துறை உதவி ஆணையர் கிருஷ்ணன், கோயில் செயல் அலுவலர் மாதவன் உடனிருந்தனர்.