ஓட்டல்களில் ஆம்லெட் நிறுத்தம். வெங்காயம் விலை உயர்வு காரணம்
ஓட்டல்களில் ஆம்லெட் நிறுத்தம். வெங்காயம் விலை உயர்வு காரணம்
வெங்காயம் தட்டுப்பாடு- மதுரை ஓட்டல்களில் ‘ஆம்லெட்’ நிறுத்தம்
வெங்காயம் தட்டுப்பாடு காரணமாக மதுரையில் பல ஓட்டல்களில் ஆம்லெட் உள்ளிட்ட சில உணவு வகைகளை நிறுத்தி உள்ளனர். இறக்குமதி வெங்காயம் நிலைமையை சீராக்குமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
வெங்காயம் விலை உயர்வால் ஆம்லெட் நிறுத்தப்பட்டுள்ளது தொடர்பாக வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகை
வெங்காயம் தட்டுப்பாடு காரணமாக மதுரையில் பல ஓட்டல்களில் ஆம்லெட் உள்ளிட்ட சில உணவு வகைகளை நிறுத்தி உள்ளனர். இறக்குமதி வெங்காயம் நிலைமையை சீராக்குமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மதுரை:
சந்தையில் காய்கறிகள் வாங்கச்செல்லும்போது வெங்காயத்தை வாங்காமல் யாரும் வருவதில்லை. சமையலுக்கு அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் வெங்காயம் முதல் இடம் பிடிக்கிறது. எந்த ஒரு உணவையும் சமைக்க வீடுகளில் வெங்காயத்தைதான் முதலில் வெட்டி தயார் செய்வார்கள்.
கடந்த சில மாதங்களாக பெரிய வெங்காயம் (அதாவது பல்லாரி) கிலோ ரூ.50-க்கும் குறைவான விலையில் விற்கப்பட்டு வந்தது. தெலுங்கானா, மராட்டியம், ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் பெரிய வெங்காயம் அதிக அளவில் விளைகிறது. சமீபத்தில் இந்த மாநிலங்களில் எல்லாம் கடும் மழை பெய்தது.
இதன் காரணமாக, பெரிய வெங்காயத்தின் விளைச்சல் கடும் சரிவை சந்தித்து உள்ளது. வரத்து குறைவின் காரணமாக சந்தைகளில் பெரிய வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கடந்த ஒரு வாரத்தில் பெரிய வெங்காயம் விலை கிலோவுக்கு ரூ.50 அதிகரித்தது.
தற்போது பல இடங்களில் ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை ரூ.100 ஆக உள்ளது. இதையடுத்து வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்தும் வகையில் ஆப்கானிஸ்தான், எகிப்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து பெரிய வெங்காயத்தை மத்திய அரசு இறக்குமதி செய்து வருகிறது.
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெங்காய மூடைகள் உடனடியாக சென்னை, மதுரை போன்ற நகரங்களின் சந்தைகளில் விற்பனைக்கு வந்துவிட்டன. இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம் கிலோ ரூ.45-க்கு விற்கப்படும் என்றும் அரசு அறிவித்து உள்ளது.
மதுரையில் புரோட்டா கடைகளில் ஆம்லெட், வெங்காய தோசை, வெங்காய ஊத்தப்பம் போன்றவற்றை வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள். தற்போது வெங்காய விலையேற்றம் காரணமாக மதுரையில் பல ஓட்டல்களில் ஆம்லெட் கிடையாது என்று கூறிவிடுகின்றனர். ஒருசில ஓட்டல்களில் கூடுதல் விலைக்கு விற்கிறார்கள்.
உதாரணமாக ஒரு ஆம்லெட் ரூ.15-க்கு விற்கப்பட்டது. தற்போது சில கடைகளில் ரூ.20 ஆக அதிகரித்துள்ளது. இந்தநிலை எப்போது மாறும் என்று வாடிக்கையாளர்கள் கவலை தெரிவித்து உள்ளனர். இறக்குமதி வெங்காயம் வரத்து அதிகரித்தால் வெங்காயம் விலை சற்று குறையவும், நிலைமை சீராகவும் உதவும் என்று வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து மதுரையை சேர்ந்த ஆம்லெட் பிரியர் ஒருவர் கூறுகையில், “ஆம்லெட்டுக்கு வெங்காயம் தேவை. எனவே வெங்காயத்தின் விலையேற்றத்தை பொறுத்து ஆம்லெட் விலை உயர்வை ஏற்றுக்கொள்ளலாம். அதே நேரத்தில் பல கடைகளில் ஆபாயில் விலையையும் ஆம்லெட் விலைக்கு நிகராக வைத்துள்ளார்கள். முட்டை வகை உணவுகளுக்கு ஒரே மாதிரி விலை என்கிறார்கள். எனவே சாமானிய மக்கள் பயன்படும் வகையில் முட்டை வகை உணவுகளுக்கான விலையை முறைப்படுத்த வேண்டும்” என்றார்.