திருச்சி புத்தூர் நால்ரோடு அருகே உள்ள டாஸ்மாக் மதுபான கடையில் உள்ள பாரில் 24 மணி நேரம் மது விற்பனை உண்டு.
இந்த பாரின் எதிரில் மாநகராட்சி பள்ளி மற்றும் பேருந்து நிறுத்தமும் உள்ளது.
எந்நேரமும் போதையில் வரும் ஆசாமிகளை கண்டு பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருக்கும் பொது மக்களும், பள்ளிக்கு வரும் மாணவிகளும், அவர்களது பெற்றோர்களும் கடும் அச்சத்துடன் தான் இந்த கடையை கடந்து செல்வார்கள்.
இந்நிலையில் இன்று மாலை இந்த டாஸ்மாக் பாரில் மது அருந்திய இரு வாலிபர்கள் மது போதையில் பீர் பாட்டில்களால் தாக்கி கொண்டும் கத்தியால் குத்திக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இதில் ஒரு வாலிபர் உயிருக்கு போராடிய நிலையில் சாலையில் கிடந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு உறையூர் பகுதியில் டாஸ்மாக் பாரில் மது அருந்திய நண்பர்கள் மோதல் சம்பவத்தில் வாலிபர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதனை உறையூர் பகுதியில் உள்ள மூன்று டாஸ்மாக் கடைகளுக்கும் மாவட்ட ஆட்சியர் சீல் வைத்தார்.
இதே போன்று புத்தூர் நான்கு ரோட்டில் அமைந்துள்ள இந்த டாஸ்மாக் கடையையும் மூடிட மாவட்ட ஆட்சித் தலைவர் உடனடியாக உத்தரவிட வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.