திருச்சி மாநாட்டில் வியாபாரிகள் குடும்பத்தோடு பங்கேற்க வேண்டும்,
மாவட்ட தலைவர் ஸ்ரீதர் அழைப்பு.
திருச்சி சமயபுரத்தில் நாளை (மே 5 ஆம் தேதி) தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டு, அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்த மாநாடு குறித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு திருச்சி மாவட்ட தலைவர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழக வணிகர்களின் துயரை துடைத்திட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு திருச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரை ஆற்றிடும் வகையில் மாபெரும் மாநாட்டினை வணிகர் தினமான நாளை (மே 5-ந்தேதி) நடத்திட ஏற்பாடுகள் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா மாநில பொதுச்செயலாளர் கோவிந்தராஜுலு மாநில பொருளாளர் சதக்கத்துல்லா ஆகியோரின் வழிகாட்டுதலின்படி
பிரம்மாண்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாளை( மே 5 ஆம் தேதி) அன்று தமிழகம் முழுவதும் கடைகளுக்கு விடுமுறை அளித்து, 5 லட்சத்திற்கும் மேற்பட்ட வணிகர்கள் திருச்சி தரணியில் திரள இருக்கிறார்கள். மாநாட்டில் பங்கேற்கும் தமிழக முதல்வரை வணிகர்கள் அனைவரும் வரவேற்று, வணிகர் வாழ்வில் ஒரு புதிய அத்தியாயத்தையும், வணிகர்களின் வரலாற்றில் புதியதோர் மைல் கல்லையும் படைத்திட இருக்கிறார்கள். நடைபெற இருக்கும் 39 ஆவது மாநில மாநாடு வணிகர்களின் வரலாற்று அத்தியாயத்தில் முத்திரைப் பதித்து, ஒரு அடையாள மாநாடாக, வணிக வரலாற்றின் ஒரு திருப்பு முனையாக நிச்சயம் அமையும் என்கிற உறுதியோடு, குடும்ப விழாவாக கருதி, வணிகர்கள் குடும்பத்துடன் பங்கேற்க இருக்கிறார்கள் .
இவ்வாறு திருச்சி மாவட்ட தலைவர் ஸ்ரீதர் கூறியுள்ளார்