சமயபுரம் மாரியம்மன் கோவில்தேரோட்டத்தையொட்டி திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இன்று (செவ்வாய்க்கிழமை)போக்குவரத்துமாற்றம்செய்யப்படுகிது
சித்திரை தேரோட்டம்
சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை தேரோட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் நேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். இதில் அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.
அப்போது, கூட்ட நெரிசலை தவிர்க்க சிறப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்றும், பக்தர்களின் வசதிக்காகவும், சமயபுரம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் தடுக்கவும், திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்தை மாற்றவும் போலீஸ் சூப்பிரண்டு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அதன்படி, உடனடியாக அமலுக்கு வந்தது. இந்த போக்குவரத்து மாற்றம் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 3 மணி வரை நடைமுறையில் இருக்கும்.
திருச்சியில் இருந்து சேலம் நோக்கி செல்லும் அனைத்து கனரக மற்றும் சரக்கு வாகனங்கள், புறநகர் பஸ்கள் திருச்சி குடமுருட்டி சோதனை சாவடி, ஜீயபுரம், பெட்டவாய்த்தலை, குளித்தலை, முசிறி, தொட்டியம் வழியாக நாமக்கல் செல்லவேண்டும்.
சேலம், நாமக்கல்லில் இருந்து திருச்சி நோக்கி வரும் அனைத்து கனரக மற்றும் சரக்கு வாகனங்கள், பஸ்கள் முசிறி கைகாட்டி வழியாக குளித்தலை நோக்கி திருப்பி விடப்படும். அங்கிருந்து பெட்டவாய்த்தலை, ஜீயபுரம் வழியாக மீண்டும் திருச்சியை வந்தடையலாம்.
திண்டுக்கல், மதுரை வழித்தடம்
திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை வழியாக திருச்சி வந்து சென்னை நோக்கி செல்லும் அனைத்து கனரக மற்றும் சரக்கு வாகனங்களும், மணப்பாறை ஆண்டவர் கோவில் சோதனை சாவடியில் திருப்பி விடப்படும். அங்கிருந்து குளித்தலை, முசிறி பெரியார் பாலம், துறையூர், பெரம்பலூர் பைபாஸ் வழியாக சென்னை நோக்கி செல்லலாம்.
மதுரை தேசிய நெடுஞ்சாலை வழியாக திருச்சி வந்து சென்னை நோக்கி செல்லும் அனைத்து கனரக வாகனங்களும், மணப்பாறை வழியாக செல்ல லஞ்சமேடு கைகாட்டியில் திருப்பிவிடப்படும். அங்கிருந்து மணப்பாறை ஆண்டவர்கோவில் சோதனைசாவடி, குளித்தலை, முசிறி பெரியார் பாலம், துறையூர் வழியாக பெரம்பலூர் புறவழிச்சாலை வழியாக சென்னை நோக்கி செல்லலாம்.
தஞ்சாவூர், புதுக்கோட்டை
திருச்சி, தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டையிலிருந்து சென்னை செல்லும் அனைத்து கனரக சரக்கு வாகனங்களும் கொள்ளிடம் ‘ஒய்’ சாலை சந்திப்பில் திருப்பிவிடப்படும். அங்கிருந்து கொள்ளிடம் ரவுண்டானா, மண்ணச்சநல்லூர், அய்யம்பாளையம், எதுமலை சந்திப்பு, திருப்பட்டூர் இணைப்பு சாலை, சிறுகனூர் சந்திப்பு மற்றும் சென்னை டிரங்க் சாலை வழியாக சென்னைக்கு செல்லவேண்டும்.சென்னையில் இருந்து திருச்சி நோக்கி வரும் வாகனங்கள் பெரம்பலூரில் திருப்பிவிடப்படும். அங்கிருந்து அரியலூர், புள்ளம்பாடி, லால்குடி, கொள்ளிடம் ரவுண்டானா, கொள்ளிடம் புதுப்பாலம் வழியாக திருச்சியை அடையலாம்.
சென்னை சாலையில் இருந்து திருச்சி நோக்கிசெல்லும்அனைத்துகனரகவாகனங்களும் தச்சங்குறுச்சி, குமுளூர், பூவாலூர் சந்திப்பு, லால்குடி சந்திப்பு, கொள்ளிடம் ரவுண்டானா, கொள்ளிடம் புதிய பாலம் வழியாக திருச்சிக்கு வரவேண்டும்.
மேலும், இந்த போக்குவரத்து மாற்றத்துக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு கேட்டுக்கொண்டுள்ளார்.
இதனைத்தொடர்ந்த போக்குவரத்து மாற்றம் நேற்று மதியம் முதலே செயல்பாட்டுக்கு வந்தது.