இந்தியாவுடன் இலங்கை அணி 2 டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது.
முதலாவது கிரிக்கெட் போட்டி இன்று பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் காலை 9:30 க்கு மணிக்கு தொடங்குகிறது
ரோகித் சர்மா முழு நேர கேப்டனாக பதவி ஏற்ற பின் சந்திக்கும் முதல் டெஸ்ட் போட்டி இதுவாகும் .
இந்திய முன்னாள் கேப்டன் விராட் கோலியின் 100-வது டெஸ்ட் போட்டி இது என்பதால் அந்த வகையிலும் இந்த போட்டி கவனத்தை ஈர்த்துள்ளது. 2019-ம் ஆண்டு நவம்பர் மாதத்திற்கு பிறகு எந்த ஒரு சர்வதேச சதமும் அடிக்காத விராட் கோலி 100-வது டெஸ்டிலாவது சதம் காண்பாரா? என ரசிகர்கள் எதிர்பார்ப்பு.
பொதுவாக இந்திய ஆடுகளங்கள் முதல் இரு நாட்கள் பேட்டிங்குக்கு உகந்ததாக இருக்கும். போக போக சுழலின் தாக்கம் எடுபடும். நிச்சயம் ஆடுகளத்தில் பந்து சுழன்று திரும்பும். ஆனால் முதல் நாளில் இருந்தே சுழன்று திரும்புமா அல்லது 4-வது நாளில் இருந்தா என்பதை உறுதியாக சொல்ல முடியாது என்று இந்திய கேப்டன் ரோகித் சர்மா கூறினார். இதனால் சுழற்பந்து வீச்சாளர்கள் அஸ்வின், ரவீந்திர ஜடேஜாவின் ஆதிக்கம் மேலோங்க வாய்ப்புள்ளது.
உள்ளூரில் இந்தியா எப்போதும் அசுர பலம் வாய்ந்த அணி என்பதில் மாற்று கருத்து கிடையாது. அதுவும் தற்போதைய இலங்கை அணியுடன் ஒப்பிடும் போது இந்தியாவின் கையே ஓங்குகிறது. உள்ளூரில் கடைசி 14 டெஸ்ட் தொடர்களை வரிசையாக கைப்பற்றி வீறுநடை போடும் இந்தியா அந்த சாதனை பயணத்தை நீட்டிக்கும் உத்வேகத்துடன் ஆயத்தமாகியுள்ளது.
திமுத் கருணாரத்னே தலைமையிலான இலங்கை அணியில் போதிய அனுபவ வீரர்கள் இல்லை. பேட்டிங்கில் கருணாரத்னே, நிசாங்கா, தனஞ்ஜெயா டி சில்வா ஆகியோரைத் தான் அந்த அணி மலைபோல் நம்பி உள்ளது. சுழற்பந்து வீச்சாளர்கள் எம்புல்டெனியா, ஜெயவிக்ரமா சவால் அளிக்கக்கூடிய திறமைசாலிகள். பேட்ஸ்மேன் குசல் மென்டிஸ் தசைப்பிடிப்பால் அவதிப்படுவதால் அவர் விளையாடமாட்டார் என்று இலங்கை கேப்டன் கருணாரத்னே தெரிவித்தார்.
கருணாரத்னே மேலும் கூறுகையில், ‘இது இலங்கையின் 300-வது டெஸ்ட் போட்டியாகும். இந்த சிறப்புமிக்க டெஸ்ட் போட்டியின் கேப்டனாக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இது எனக்கு மிகப்பெரிய கவுரவமாகும். இலங்கைக்கு சாதகமான முடிவு கிடைக்க எனது மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிப்பேன். இது விராட் கோலியின் 100-வது டெஸ்ட் என்பதை அறிவேன். இந்த போட்டிக்கு 50 சதவீத ரசிகர்களை இந்திய கிரிக்கெட் வாரியம் அனுமதி அளித்திருப்பது வரவேற்கத்தக்கது. இலங்கை வீரர்கள் கடினமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள். எல்லோரும் நல்ல நிலையில் உள்ளோம். இரு டெஸ்டிலும் அவர்கள் சிறந்த ஆட்டத்திறனை வெளிப்படுத்துவார்கள் என்று நம்புகிறேன்’ என்றார்.
‘இலங்கை அணி இதுவரை இந்திய மண்ணில் ஒரு டெஸ்டில் கூட வெற்றி பெற்றது கிடையாது. அந்த பெருமையை விட்டு விடக்கூடாது என்ற எண்ணமே இந்தியாவுக்கு நெருக்கடியாக இருக்கும். அதை சாதகமாக பயன்படுத்திக் கொள்வதே எங்களது வேலை’ என்றும் கருணாரத்னே குறிப்பிட்டார். இந்திய மண்ணில் 20 டெஸ்டுகளில் ஆடியுள்ள இலங்கை அணி 11-ல் தோல்வியும், 9-ல் டிராவும் கண்டுள்ளது