இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது.
இதில் லக்னோவில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியா 62 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை துவம்சம் செய்து தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.
இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் போட்டி இமாசலபிரதேச மாநிலத்தில் உள்ள மலைவாச ஸ்தலமான தர்மசாலாவில் இன்று நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது.
தொடக்க வீரர்களாக பதும் நிசாங்கா மற்றும் குணதிலகா களமிறங்கினர். இருவரும் இந்திய அணியின் பந்துவீச்சை விளாசி தள்ளினர். குணதிலகா(38 ரன்கள்) ஆட்டமிழந்தார். அடுத்து வந்த, அசலங்கா( 2), கமில் மிஷாரா(1 ரன்) மற்றும் சண்டிமால்(9 ரன்கள்) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.
இறுதியில் கேப்டன் தசுன் சணகா அதிரடி காட்ட(47) இலங்கை அணி 20 ஓவரில் இலங்கை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் குவித்தது. இதையடுத்து 184 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரரான கேப்டன் ரோகித் 1 ரன்னில் வெளியேறினார், மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் இஷான் கிஷன் 16 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இதையடுத்து களமிறங்கிய ஸ்ரேயஸ் அய்யரும், சஞ்சு சாம்சனும், அணியின் ஸ்கோரை சீரான வேகத்தில் உயர்த்தினர்.
சஞ்சு சாம்சன் தொடக்கத்தில் பொறுமை காட்டினாலும், பின்னர் அதிரடி காட்டி 3 சிக்சர்களை பறக்கவிட்டார். அவர் 39 ரன்களில் வெளியேறினார்.
அடுத்து வந்த ஜடேஜா அதிரடியுடன் 18 பந்துகளில் 45 ரன்கள் குவித்தார். தொடக்கத்தில் இருந்தே அதிரடி காட்டிய ஸ்ரேயஸ் அய்யர் 44 பந்துகளில் 4 சிக்சருடன் 74 ரன்கள் குவித்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்சென்றார்.
இறுதியில் இந்திய அணி 17.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரவெற்றி பெற்றது.
அதிரடியாக விளையாடிய ஸ்ரேயஸ் அய்யர் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.
மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை நடைபெற உள்ளது.