திருச்சியில் ரயில் நிலையத்தில் மீட்கப்பட்ட
31 சவரன் நகைகள் உரியவரிடம் ஒப்படைப்பு
நேர்மையாக ஒப்படைத்தவருக்கும் சான்றிதழ்.
திருச்சியில் ரயில் நிலையத்தில் தவறவிட்ட 31 சவரன் நகைகளை ரயில்வே போலீஸôர் மீட்டு, உரியவரிடம் ஒப்படைத்தனர். அதனை கண்டெடுத்து வழங்கிய ரயில்வே அஞ்சலக பணியாளருக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
திருச்சி, அரியமங்கலம் உக்கடை பகுதியைச் சேர்ந்தவர் சர்ஜின்பர்வின் (வயது 35). வெளிநாட்டில் பணியாற்றிய இவர் அண்மையில் தாயகம் திரும்பி, ஆட்டோ வைத்து வாடகைக்கு ஓட்டி வருகிறார்.
அவர் தனது மனைவி வாகித்ஷெரிப் (31) மற்றும் குடும்பத்தினர், சென்னையில் நடைபெற்ற திருமண விழாவில் பங்கேற்றுவிட்டு கடந்த பிப்ரவரி 9 ஆம் தேதி பல்லவன் ரயில் மூலம் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தை வந்தடைந்தனர்.
ரயில் நிலையத்தில் 3 ஆவது நடைமேடையில் ரயிலிலிருந்து இறக்கிய தங்களது உடைமைகளை ஒரு டிராலியில் வைத்து தள்ளிக்கொண்டு வெளியே வந்துள்னர். 1ஏ நடைமேடை பகுதியில் வந்தபோது டிராலியிலிருந்த உடைமைகளுள் ஒரு பை (ஷோல்டர் பேக்) மட்டும் நழுவி கீழே விழுந்துள்ளது. இதை யாரும் கவனிக்கவில்லை. அனைவரும் வீடு சென்று விட்டனர். வீட்டில் உடைமைகளை எடுத்து வைத்த போதும் பை காணாமல் போனது குறித்து தெரியவில்லை.
இதற்கிடையே அன்றைய தினம் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் உள்ள அஞ்சலகத்தில் பணியாற்றும் கிஷோர் என்ற பணியாளர், தபால்களை ரயிலில் அனுப்பிவிட்டு வெளியேறிக்கொண்டிருந்தார். அப்போது ரயில் நிலைய வளாகத்தில் வழியில் ஒரு பை கிடந்ததை கண்டு எடுத்துள்ளார். அதில் பார்த்தபோது, ஏராளமான நகைகள் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவர் நேர்மையாக, ரயில்வே போலீஸôரிடம் அந்த பையை ஒப்படைத்துள்ளார். இது தொடர்பாக, ரயில்வே போலீஸôர் விசாரணை மேற்கொண்டிருந்தனர். பையில் முகவரி ஏதுமில்லாததால் அதிலிருந்த நகைகளை பார்த்து பட்டியலிட்டு பாதுகாப்பா வைத்திருந்தனர்.
இந்நிலையில், பிப். 12 ஆம் தேதி, நகை வைததிருந்த பையை பார்த்தபோது காணாமல் போனது தெரியவந்தது. இதனையடுத்து ரயில்வே காவல் நிலையத்தில் சென்று புகார் அளித்துள்ளனர். தம்பதியர் புகார் அளித்ததைத் தொடர்ந்து, பை மற்றும் நகைகள் அவர்களுடையதுதானா என்பது குறித்து ரயில்வே போலீஸôர் விசாரித்து உறுதி செய்தனர். அதனைத் தொடர்ந்து, வியாழக்கிழமை திருச்சி ரயில்வே காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து, நகைகளை உரிமையாளர்களிடம் வழங்கப்பட்டது. ரயில்வே காவல் கண்காணிப்பாளர் அதிவீரபாண்டியன் நகைகளை உரிமையாளர்களிடம் வழங்கினார் . உடன் துணை காவல் கண்காணிப்பாளர் மகாதேவன், ரயில்வே காவல் ஆய்வாளர்கள் மோகனசுந்தரி, ஷீலா (தனிப்பிரிவு), உதவி ஆயாவாளர் லட்சுமி உள்ளிட்டோர் உடனிருந்தனர். நகைகளை பெற்றுக்கொண்ட தம்பதியர் ரயில்வே போலீஸôருக்கும், நகைகளை நேர்மையாக ஒப்படைத்த அஞ்சலக பணியாளர் கிஷோருக்கும் நன்றி தெரிவித்துச் சென்றனர். நேரமையுடன் நகைகளை ஒப்படைத்த கிஷோருக்கு ரயில்வே காவல்துறை சார்பில் பாராட்டு சான்றும் வழங்கப்பட்டது.