14-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட்இண்டீசில் நடந்து வருகிறது.
இதில் டிரினிடாட்டில் நடந்த லீக் ஆட்டத்தில் இந்தியா-அயர்லாந்து (பி பிரிவு) அணிகள் மோதின.
கொரோனாவால் 6 வீரர்கள் பாதிக்கப்பட்டாலும், எஞ்சிய 11 வீரர்களுடன் இந்திய அணி களம் இறங்கியது. இதனால் போட்டி திட்டமிட்டபடி நடந்தது. இந்திய அணியை நிஷாந்த் சிந்து வழிநடத்தினார். ‘டாஸ்’ ஜெயித்த அயர்லாந்து அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 307 ரன்கள் குவித்தது.
இந்திய அணியில் அதிகபட்சமாக ஹர்னூர் சிங் 88 ரன்கள் விளாசினார்.
இதையடுத்து 308 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அயர்லாந்து அணியின் பேட்ஸ்மேன்கள் ஒருவரும் நிலைத்து நின்று ஆடவில்லை. இந்திய அணியில் பந்துவீச்சை சமாளிக்கமுடியாமல் அயர்லாந்து பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர்.
இறுதியில் அயர்லாந்து அணி 39 ஓவர்களில் 133 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் இந்திய அணி 174 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
அதிகபட்சமாக 88 ரன்கள் குவித்து வெற்றிக்கு உதவிய ஹர்னூர் சிங் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 2 வெற்றியுடன் தனது பிரிவில் முதலிடத்தில் உள்ளது.