Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

சர்வதேச பேட்மிண்டன் போட்டி இன்று லக்னோவில் தொடங்குகிறது.

0

'- Advertisement -

மொத்தம் ரூ.1 கோடி பரிசுத் தொகைக்கான சையது மோடி சர்வதேச பேட்மிண்டன் போட்டி உத்தரபிரதேச மாநில தலைநகர் லக்னோவில் இன்று முதல் 23-ந் தேதி வரை நடக்கிறது.

இந்த போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஒலிம்பிக் போட்டியில் 2 முறை பதக்கம் வென்றவரான இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து கலந்து கொள்கிறார்.

கடந்த வாரம் நடந்த இந்திய ஓபன் போட்டியில் அரைஇறுதியில் தோல்வி கண்ட சிந்து 2019-ம் ஆண்டு உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற பிறகு பட்டம் எதுவும் வெல்லவில்லை. அவர் சாம்பியன்ஷிப் தாகத்தை தீர்ப்பாரா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். அவர் தனது முதலாவது சுற்று ஆட்டத்தில் சக நாட்டு வீராங்கனை தான்யா ஹேமந்தை சந்திக்கிறார். மற்றொரு இந்திய வீராங்கனையான சாய்னா நேவால் தனது முதலாவது சுற்று ஆட்டத்தில் செக்குடியரசின் தெரசா சாபிகோவாவுடன் மோதுகிறார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர்கள் பிரனாய், சவுரப் வர்மா, சமீர் வர்மா ஆகியோர் பங்கேற்கிறார்கள். சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட இந்தியாவின் முன்னணி வீரர் ஸ்ரீகாந்த் களம் இறங்குவதில் சந்தேகம் நிலவுகிறது.

இதேபோல் இந்திய வீரர் சாய் பிரனீத் கொரோனா சோதனை முடிவை பொறுத்து தான் இந்த போட்டியில் ஆடுவது குறித்து முடிவு செய்வார் என்று தெரிகிறது.

கடந்த வாரம் நடந்த இந்திய ஓபன் போட்டியில் உலக சாம்பியனான லோக் கின் யிவ்வை (சிங்கப்பூர்) வீழ்த்தி மகுடம் சூடிய இந்திய இளம் வீரர் லக்‌ஷயா சென் கடைசி நேரத்தில் போட்டியை விட்டு விலகி இருக்கிறார். உத்தரகாண்டை சேர்ந்த 20 வயதான லக்‌ஷயா சென் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் தொடர்ந்து 9 சர்வதேச போட்டிகளில் கலந்து கொண்டதால் ஏற்பட்ட உடல் சோர்வு காரணமாக போட்டியில் இருந்து ஒதுங்கும் முடிவை எடுத்துள்ளார்.

மார்ச் மாதம் முதல் தொடங்கும் போட்டிக்கு தயாராக போதிய ஓய்வு தேவைப்படுவதால் இந்த விலகலை எடுத்து இருப்பதாக தெரிவித்து இருக்கும் அவர் கடைசி நேரத்தில் விலகியதற்காக போட்டி அமைப்பாளர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

கடந்த வாரம் கொரோனா பாதிப்புக்கு ஆளான இந்திய வீராங்கனை அஸ்வினி, வீரர் மனு அட்ரி ஆகியோர் இரட்டையர் பிரிவில் களம் இறங்க வாய்ப்பில்லை.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.