உத்தர பிரதேசம், பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட் மற்றும் மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களுக்கு அடுத்த ஆண்டு சட்டப்பேரவை நடைபெற உள்ளது. ஒமைக்ரான் அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில், 5 மாநிலங்களில் தேர்தல் திட்டமிட்டபடி நடைபெறுமா ? என்ற பேச்சுக்கள் எழுந்துள்ளன.
தேர்தல் நடைபெற்றால், அதன் மூலம் மூன்றாது அலை பரவ வாய்ப்பு இருப்பதாக பரவலாக நிபுணர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது.
ஒமைக்ரான் அச்சுறுத்தல் காரணமாக உத்தர பிரதேச தேர்தலை ஒரு மாதம் அல்லது இரண்டு மாதங்களுக்கு ஒத்திவைப்பது பற்றி தேர்தல் ஆணையம் பரிசீலிக்கலாம் என்று உத்தரபிரதேச ஐகோர்ட் நேற்று ஆலோசனை கூறியது.
இந்த நிலையில், சுகாதாரத்துறை செயலாளருடன் தேர்தல் ஆணைய அதிகாரிகள் இன்று ஆலோசனை மேற்கொண்டனர்.
இந்த ஆலோசனையின் போது தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை, தொற்று பாதிப்பு விவரம் போன்ற தகவல்களை கேட்டு பெற்றிருக்கலாம் என்று தகவல்கள் கூறுகின்றன.
அதேபோல், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டியதன் அவசியம் குறித்தும் தேர்தல் ஆணையம் ஆலோசித்ததாக கூறப்படுகிறது.
தேர்தல் முன்னேற்பாடுகளை பார்வையிட தேர்தல் ஆணைய அதிகாரிகள் நாளை உத்தர பிரதேசத்திற்கு செல்கின்றனர்.
அப்போது, பாராமிலிட்டரி அதிகாரிகளையும் சந்தித்து ஆலோசனை நடத்த இருக்கின்றனர். 5 மாநிலங்களிலும் தேர்தல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வரும் நிலையில்,
தேர்தல் ஒத்திவைக்கப்பட வாய்ப்பு இல்லை என தகவல்கள் கூறியதாக பிரபல ஆங்கில தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.