திருச்சி வரும் முதல்வருக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பு அளிக்க வேண்டும். செயற்குழு கூட்டத்தில் கே.என்.நேரு பேச்சு.
திருச்சி வருகை தரும்
முதல்வருக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பு அளிக்க வேண்டும்.
தி.மு.க. செயற்குழுக் கூட்டத்தில் அமைச்சர் கே.என் நேரு பேச்சு.
திருச்சி தில்லைநகர் சாஸ்திரி சாலையில் உள்ள திமுக முதன்மைச் செயலாளர் அலுவலகத்தில் திருச்சி மத்திய மற்றும் வடக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் கழக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான
கே.என்.நேரு தலைமையில் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் (எம்எல்ஏ), மாநகர செயலாளர் அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர்கள் சௌந்தரபாண்டியன், ஸ்டாலின் குமார், பழனியாண்டி,
கதிரவன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் பெரியசாமி, பகுதி செயலாளர்கள் கண்ணன், மோகன்தாஸ், காஜாமலை விஜி, இளங்கோ,முத்துச்செல்வம், கிராப்பட்டி செல்வம், பி.ஆர்.பி. பாலசுப்ரமணியம், உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் அமைச்சர் கே. என். நேரு பேசும்போது கூறியதாவது :-
கடந்த 10 ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் எதுவும் செய்யவில்லை. திருச்சியை எடுத்துக்கொள்ளுங்கள். எங்காவது ஒரு சாலை போட்டிருக்கிறார்களா? இல்லை ஒரு கட்டிடமாவது கட்டியிருக்கிறார்களா?. வாய்க்கால் தூர்வாரி இருக்கிறார்களா? எதுவுமே செய்யவில்லை. ஆனால் நம்மை குறை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
மக்கள் நம்மிடம் மனுக்கள் கொடுத்தால் நடக்கும் என நம்புகிறார்கள். கடந்த ஆட்சியில் அமைச்சர்கள் ஜாலியாக இருந்தார்கள். தற்போதைய முதல்வரிடம் அமைச்சர்கள் வேலை செய்யாமல் இருக்க முடியாது. அனைத்துத் துறைகளையும் முன்னேற்றப் பாதைக்கு கொண்டு செல்ல முதல்வர் முயற்சி மேற்கொண்டு வருகிறார்.
தி.மு.க. ஆட்சி அமைவதற்கு திருச்சி மட்டுமல்லாமல் டெல்டா மாவட்டங்கள் காரணமாக இருந்தது. எனவே வருகிற 30-ம் தேதி வருகைதரும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு தமிழகத்திலேயே மிகப்பெரிய அளவிலான வரவேற்பை நாம் தந்தாக வேண்டும்.
பஞ்சப்பூர் புதிய பஸ் நிலையத்திற்கு முதற்கட்டமாக ரூ.400 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பஸ் நிலையம் சுமார் 800 கோடி மதிப்பில் வருகிறது. இங்கு கோயம்பேடு மார்க்கெட் மாதிரி மொத்த மார்க்கெட் சில்லரை மார்க்கெட் கொண்டு வரப்படும்.
மேலும் ஒரே நேரத்தில் 350 பஸ்கள் நிறுத்தி வைக்கும் வசதி உள்ளது. அதுமட்டுமல்லாமல் தனியாக டாக்ஸி ஸ்டாண்ட், பஸ் ஸ்டாண்ட் , ஆம்னி பேருந்துகளுக்கு தனி இடம், ஓட்டல், குடிநீர் அடிப்படை வசதிகளும் கொண்டுவரப்பட உள்ளது.
இந்த பஸ் நிலையம் வருவதால் ஸ்ரீரங்கம் திருச்சி கிழக்கு மேற்கு சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த ஆட்டோ தொழிலாளர்கள், ஹோட்டல் தொழிலாளர்கள் என சுமார் 2 ஆயிரம் குடும்பங்கள் வாழ்வாதாரம் பெற வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த பஸ் நிலையத்தை ஒட்டியுள்ள விளைநிலங்கள், காலி மனைகள் மற்றும் வீடுகளின் மதிப்பு பலமடங்கு உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகளும் நல்ல பயனை அடைவார்கள்.
திருச்சியை பொருத்தமட்டில் இந்தப் பக்கம் காவிரி ஆறும், நஞ்சை நிலங்களும் இருப்பதால் தொழிற்சாலைகளுக்கு நிலம் கிடைக்காது. தொழிற்சாலைகளுக்கு நிலம் வேண்டும் என்றால் மணப்பாறை, விராலிமலை நோக்கித் தான் செல்ல வேண்டும். இந்த ஒருங்கிணைந்த பஸ் நிலையத்தால் அடுத்த 10 வருடத்தில் திருச்சி முன்மாதிரி நகரமாக மாறும்.
இவ்வாறு அவர் கூறினார்.