மோடியின் அறிவிப்பால். உண்ணாவிரத போராட்டத்தை முடித்துக் கொண்டு இனிப்பு வழங்கி,வெடி வெடித்து அய்யாக்கண்ணு கொண்டாட்டம்.
ஓராண்டுக்கும் மேலாக பஞ்சாப், உத்தரப் பிரதேசம், அரியானா, உள்ளிட்ட பல்வேறு மாநிலத்தை சேர்ந்த விவசாயிகள் தொடர்ந்து 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 400-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.
இதனை கண்டித்து தமிழகத்தில் 3 வேளாண் விவசாய சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும் தமிழகத்தில் தி.மு.க., கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சியினரும், பல்வேறு விவசாய அமைப்புகளும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் இன்று 3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதாக மோடி அறிவித்துள்ளார்.
இது விவசாயிகள் இடையே மிகுந்த வரவேற்ப்பை பெற்றுள்ளது.
3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் விவசாய சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் அவரது வீட்டு முன்பு ஒவ்வொரு நாளும் விவசாயிகள் கடந்த 38 நாட்களாக பல்வேறு விதமான நூதன உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் இன்று பிரதமர் மோடி இந்த 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற்றதாக அறிவிப்பு வெளியிட்டார்.
இதனை வரவேற்பதாக தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார்.
மேலும் இதுகுறித்து அய்யாக்கண்ணு கூறுகையில்:-
விவசாய சட்டம் திரும்பப் பெற்றது வரவேற்க கூடியதாக இருந்தாலும் விவசாய விளைபொருட்களுக்கு ஏற்கனவே பிரதமர் மோடி சொன்னபடி இருமடங்கு விலை வழங்க வேண்டும்.
வேளாண்மை சட்டம் வாபஸ் பெற்றதால் இன்றோடு எங்களது உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்கிறோம் எனவும் கூறினார்.
நன்மை செய்தால் வாழ்த்துவோம், விவசாயிகளுக்கு ஒரு குறை என்றால் எதிர்த்துப் போராடவும் தயங்க மாட்டோம் எனவும் கூறினார்.
முன்னதாக பல்வேறு விதமான நூதன போராட்டங்களில் ஈடுபட்ட வந்த விவசாயிகள் 3 வேளாண் சட்டங்கள் வாபஸ் பெற்ற செய்திக்கு தங்கள் மகிழ்ச்சியை தெரிவிக்கும் விதமாக வெடி வெடித்தும், பொதுமக்கள் மற்றும் காவல்துறையினருக்கு விவசாயிகள் அனைவரும் இனிப்புகள் வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இந்த நிகழ்ச்சிகளில் விவசாய சங்க மாநில துணைத்தலைவர்கள் மேகராஜன்,கருவூர் தட்சிணா சிறுகாம்பூர் பரமசிவம் மாநில செயலாளர்கள் ஜான் மில்கியராஜ்,லால்குடி தியாகு,மாநில துணைச் சட்ட ஆலோசகர் முத்துசாமி. மாநில செய்தி தொடர்பார்கள் பிரேம்குமார்,
வரபிரஹாஷ்,மயிலாடுதுறை மாவட்ட தலைவர் ராமலிங்கம்,மாவட்ட செயலாளர் அன்பழகன் உள்பட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்