இந்தியாவுக்கு வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் ஜெய்ப்பூரில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இந்தியா-நியூசிலாந்து இடையிலான 2-வது 20 ஓவர் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இன்றிரவு நடைபெற உள்ளது.
முதல் ஆட்டத்தில் இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா (48 ரன்), சூர்யகுமார் யாதவ் (62 ரன்) ஆகியோரின் பேட்டிங் சிறப்பாக இருந்தது. பந்து வீச்சில் அஸ்வின், புவனேஷ்வர்குமார் கட்டுக்கோப்புடன் வீசி தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
20 ஓவர் உலக கோப்பை இறுதிப்போட்டியில் விளையாடி முடித்து அடுத்த 3 நாட்களில் களம் இறங்கிய போதிலும் நியூசிலாந்து அணி எல்லா வகையிலும் சவால் அளித்தது. முதலில் பேட் செய்து 164 ரன்கள் சேர்த்த அந்த அணி பந்துவீச்சில் கடைசி ஓவர் வரை ஆட்டத்தை கொண்டு சென்றது.கடைசி ஓவரில் தான் இந்திய அணியால் வெற்றி பெற முடிந்தது.
இன்றைய ஆட்டத்தில் தோற்றால் தொடரை இழக்க நேரிடும் என்பதால் நியூசிலாந்து வீரர்கள் பதிலடி கொடுக்க போராடுவார்கள்.
அதே சமயம் ஆதிக்கத்தை நிலைநிறுத்தி தொடரை வெல்லும் முனைப்புடன் இந்திய அணியினர் தயாராகி வருகின்றனர்.
தயாராகி
ராஞ்சியில் இதுவரை இரண்டு 20 ஓவர் போட்டிகள் (இலங்கை ஆஸ்திரேலியா) நடந்துள்ளன. இரண்டிலும் இந்தியாவே வெற்றி கண்டுள்ளது.