உடல் தானம் வழங்கிய குடும்பத்தினருக்கு மக்கள் சக்தி இயக்கம் சார்பில் பாராட்டு
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் தாலுகா, மேரீஸ் நகர், மலைக்கோயில் தெருவில் வசித்து வந்த பிரேமாவதி (வயது 85) அவர்கள் இயற்கை எய்தியதைத் தொடர்ந்து, அவரது கண்களை திருச்சி ஜோசப் கண் மருத்துவமனைக்கும், உடலை திருச்சி கி.ஆ.பெ. விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரிக்கும் தானமாக வழங்கி, மனிதநேயத்தையும் சமூக அக்கறையையும் வெளிப்படுத்திய அவரது குடும்பத்தினருக்கு மக்கள் சக்தி இயக்கம் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
பிரேமாவதியின் மகன்கள் அரசெழிலன், மாதவன் மற்றும் மகள் வாசுகி ஆகியோரின் ஈடு இணையற்ற ஈகைச் செயலை நன்றியுடன் பாராட்டி, அவர்களுக்கு பயனாடை அணிவித்து, எம்.எஸ். உதயமூர்த்தி எழுதிய புத்தகம், பாராட்டுச் சான்றிதழ் மற்றும் துணிப்பை ஆகியவை வழங்கி கௌரவிக்கப்பட்டது.
மக்கள் சக்தி இயக்க சார்பில் உடல் உறுப்பு தானம் மற்றும் உடல் தானம் வழங்கி குடும்பத்தினரை சந்திக்கும் 58வது நிகழ்வு
இந்நிகழ்வில் மக்கள் சக்தி இயக்க மாநிலப் பொருளாளர் கே.சி. நீலமேகம், துணைத் தலைவர் வெ.இரா. சந்திரசேகர், பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரியின் முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் சு. செயலாபதி, திருக்குறள் பயிற்றகம் ஒருங்கிணைப்பாளர் சிவ. தளபதி, மே.க. கோட்டை சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு குடும்பத்தினரின் மனிதநேயச் செயலைப் பாராட்டினர்கள். 
குறிப்பாக, பிரேமாவதியின் கணவர் கடந்த 2018ஆம் ஆண்டு உயிரிழந்தபோது, அவரது உடலையும் திருச்சி கி.ஆ.பெ. விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு உடல் தானமாக வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. கணவன், மனைவி இருவரும் தங்கள் உடல்களை மருத்துவக் கல்விக்கும், மனிதநேயப் பயன்பாட்டிற்கும் வழங்கிய இக்குடும்பத்தின் உயரிய செயல் சமூகத்திற்கு முன்மாதிரியாகத் திகழ்கிறது.

