Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி தில்லை நகரில் கந்துவட்டி மற்றும் நில அபகரிப்புப் புகார்: பணம் கொடுத்தவர் வீட்டின் முன்பு தீக்குளிக்க முயன்றவரால் பரபரப்பு.

0

'- Advertisement -

Ad banner

திருச்சி தில்லை நகரில் கந்துவட்டி மற்றும் நில அபகரிப்புப் புகார்: பணம் கொடுத்தவர் வீட்டின் முன்பு தீக்குளிக்க முயன்றவரால் பரபரப்பு.

 

திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்த ஆங்கரை பகுதியைச் சேர்ந்தவர் சண்முகநாதன் (வயது 58). இவர் கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு, திருச்சி தில்லை நகரை சேர்ந்த வட்டித் தொழில் செய்து வரும் ராஜாராமன் என்பவரிடம் ரூ. 25 லட்சம் கடனாகப் பெற்றுள்ளார். இதற்காக, மருதாண்டாகுறிச்சியில் உள்ள ஒரு இடம் மற்றும் ஆங்கரையில் உள்ள இரண்டு இடங்கள் என மொத்தம் மூன்று இடங்களின் பத்திரங்களை (கிரயப் பத்திரமாக) ராஜாராமன் பெயரில் எழுதிக் கொடுத்துள்ளார். கடந்த 16 ஆண்டுகளாக இந்தக் கடனுக்கான வட்டியை சண்முகநாதன் முறையாக செலுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.

 

இந்நிலையில், சண்முகநாதன் தற்போது வசித்து வரும் ஆங்கரை பகுதி நிலம் (தகர சீட் வீடு அமைந்துள்ள இடம்) தற்போது பல கோடி ரூபாய் மதிப்புள்ளதாக உயர்ந்துள்ளது. இதனையடுத்து, அந்த இடத்தை வேறு நபர்களுக்கு விற்பனை செய்து பத்திரப்பதிவு செய்ய ராஜாராமன் முயன்றுள்ளார்.

இது குறித்து சண்முகநாதன் தரப்பினர் கேட்டபோது, நிலத்தை திருப்பித் தர ரூ. 1 கோடி கேட்டதாகவும், அதனை தயார் செய்த பிறகு, மண்ணச்சநல்லூர் மற்றும் உளுந்தூர்பேட்டையை சேர்ந்த இடைத்தரகர்களைக் கைகாட்டி ரூ. 1.5 கோடி, ரூ. 2 கோடி எனத் தொடர்ந்து தொகையை உயர்த்தி ரூ. 2.60 கோடி வரை கேட்டு மிரட்டுவதாகவும் கூறப்படுகிறது.

 

இது தொடர்பாக ஏற்கனவே தில்லை நகர் மற்றும் திருக்கானூர் காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டு சி.எஸ்.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், சம்பந்தப்பட்ட இடத்தை இன்று பத்திரப்பதிவு செய்ய ராஜாராமன் தரப்பு முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சண்முகநாதன், இன்று காலை தில்லை நகரில் உள்ள ராஜாராமனின் வீட்டிற்கு முன்பாக அமர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். எவ்வளவு பணம் கொடுத்தாலும் எங்களது பூர்வீக இடத்தைத் திருப்பித் தர மறுக்கிறார்கள்; எனவே குடும்பத்துடன் தீக்குளித்து இறப்பதைத் தவிர வேறு வழியில்லை எனக் கூறியவாறு, தான் வைத்திருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றித் தீக்குளிக்க முயன்றார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தில்லை நகர் காவல் நிலைய போலீசார், சண்முகநாதனை தடுத்து நிறுத்தி மீட்டனர். முதலில் காவல் நிலையத்திற்கு வர மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட சண்முகநாதனிடம் போலீசார் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனைத் தொடர்ந்து, சண்முகநாதன் மற்றும் ராஜாராமன் ஆகிய இரு தரப்பினரையும் விசாரணைக்காக தில்லை நகர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

16 ஆண்டுகளாக வட்டி வாங்கியதோடு மட்டுமல்லாமல், தற்போது பல நபர்களை கைகாட்டி அலைக்கழித்து எங்களது பூர்வீக சொத்தை அபகரிக்க ராஜாராமன் முயல்கிறார். காவல்துறை இதில் உரிய நடவடிக்கை எடுத்து எங்களது நிலத்தை மீட்டு தர வேண்டும் என சண்முகநாதனின் மைத்துனர் ஷாம்சுந்தர் செய்தியாளர்களிடம் தெரிவித்து உள்ளார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.