Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

பொதுதேர்வு எழுதி வந்த +2 மாணவி பாலியல் படுகொலை? சடலமாக மீட்பு .பொதுமக்கள் சாலை மறியல்.

0

'- Advertisement -

 

தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடந்து வரும் வேளையில், பொதுத்தேர்வு எழுத சென்ற மாணவி ஒருவர் காட்டுப்பகுதியில் இயற்கை உபாதைக் கழிப்பதற்காக மாலை சென்ற நிலையில், சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.

விளாத்திகுளம் பகுதியைச் சேர்ந்த விவசாயி தம்பதியின் 17 வயது மகள், அங்குள்ள அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த மார்ச் 10-ம் தேதி மாலை 6 மணிக்கு இயற்கை உபாதை கழிப்பதற்காக வீட்டிலிருந்து வெளியே சென்ற மாணவி, மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், பெற்றோர், தங்களது மகளைக் காணவில்லை என்று கூறி குளத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்று உள்ளார். காணாமல் போனவர் பள்ளி மாணவி என்பதால் விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க அங்கிருந்த போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

இதையடுத்து அவர் நேற்று காலை விளாத்திகுளம் மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்து உள்ளார். விளாத்திகுளம் போலீசார் மாணவியைத் தேடி வந்த நிலையில், நேற்று மாலை வேடநத்தம் காட்டுப் பகுதியில் அந்த மாணவி முகம் மற்றும் உடலில் காயங்களுடன் சடலமாக கிடப்பது தெரிய வந்துள்ளது. மாணவியின் முகம் சிதைக்கப்பட்டிருந்த விதம் காண்போரை நிலைகுலையச் செய்துள்ளது. மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு உறவினர்களும், பொதுமக்களும் குளத்தூர் – குறுக்குச் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

 

விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் மற்றும் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு ஆகியோர் நேரில் சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். மாவட்ட எஸ்.பி. மதன் தலைமையிலான போலீசார் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். “மாணவி கொலை செய்யப்படுவதற்கு முன்பு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டாரா?” என்ற கோணத்தில் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே முழு விவரமும் தெரியவரும் என்று காவல்துறையினர் கூறியுள்ளனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.