தடுப்பூசி முகாம்கள் நிறுத்தம்.மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர், அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
சென்னை ஐகோர்ட் வழக்கறிஞர்கள், ஐகோர்ட் பணியாளர்களுக்கான தடுப்பூசி முகாம் இன்று தொடங்கியது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் அரங்கத்தில் தடுப்பூசி முகாமை தலைமை நீதிபதி தொடங்கி வைத்தார். இதில் தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி ஐகோர்ட் நீதிபதிகள், அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தடுப்பூசி முகாமில் கலந்து கொண்டு பேசிய மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்,
“தமிழகத்தில் போதுமான தடுப்பூசிகள் இல்லை என்பது வருத்தமானது. தமிழகத்தில் 2 லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே கையிருப்பில் உள்ளது; மதியத்திற்கு மேல் தட்டுப்பாடுதான். தடுப்பூசி செலுத்த மக்களிடையே ஆர்வம் இருந்தாலும் தடுப்பூசிகளுக்கு பற்றாக்குறை உள்ளது.
தமிழகத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் 90,000 தடுப்பூசிகள் போடப்பட்டு சேப்பாக்கம் முதலிடத்தில் உள்ளது.
தமிழகத்திற்கு இதுவரை வந்த 1.44 கோடி தடுப்பூசி டோஸ்களில் 1.41 கோடி டோஸ்கள் இதுவரை செலுத்தப்பட்டுள்ளன. தடுப்பூசி கையிருப்பு குறைவாக இருப்பதால் சென்னையில் 45 இடங்களில் தடுப்பூசி முகாம் நிறுத்தப்பட்டுள்ளது.
நகர்ப்புற, ஆரம்ப சுகாதார நிலையங்களில் 19 இடங்களில் தடுப்பு செலுத்தும் பணிகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
சென்னையில் 5 ஆயிரம் டோஸ் கொரோனா தடுப்பூசிகள் மட்டுமே கையிருப்பில் உள்ளதாக முகாம்கள் நிறுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி வருகையில் ஏற்பட்ட ஏமாற்றத்தால் தமிழ்நாடு முழுவதும் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்” என்று அவர் கூறினார்.