திருவனந்தபுரத்தில் ஒரு வயது ஆண் குழந்தை இகான், தந்தையாலேயே அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில், அதிரவைக்கும் பல உண்மைகளை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.
கைதான தந்தை ஷிஜின் ஒரு கொடூரமான குற்றப் பின்னணி கொண்டவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
குழந்தையின் தாய் கிருஷ்ணப்பிரியா அளித்துள்ள ரகசிய வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது: “எனது கணவர் ஷிஜினுக்கு எங்கள் மகன் இகானைப் பிடிக்காது. அவருடன் நான் நெருக்கமாக இருக்கும்போது குழந்தை அழுதால் அவருக்குக் கோபம் வரும். சம்பவத்தன்று இரவு, நாங்கள் ஒன்றாக அமர்ந்திருந்தபோது குழந்தை அழுதுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஷிஜின், தனது முழங்கையால் குழந்தையின் அடிவயிற்றில் பலமாக குத்தினார். குழந்தை வலியால் துடித்தும், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல அவர் அனுமதிக்கவில்லை. நீண்ட போராட்டத்திற்குப் பிறகு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது, குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர்.”
காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், ஷிஜினுக்குப் பல பெண்களுடன் தொடர்பு இருப்பதும், இதற்காகவே வாட்ஸ்அப்பில் பிரத்யேகக் குழுக்களை வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தனது பாலியல் இச்சைகளுக்குக் குழந்தை தடையாக இருப்பதாக அவர் கருதியுள்ளார். குழந்தையுடன் தூங்கும் போதெல்லாம், குழந்தையின் முகத்தை போர்வையால் மூடி வைக்கும் விசித்திரப் பழக்கமும் அவரிடம் இருந்துள்ளது.
சோதனையின்போது ஷிஜினின் செல்போனில் குழந்தையின் புகைப்படம் ஒன்று கூட இல்லை. ஆனால், சில காலத்திற்கு முன்பு அவர் குழந்தையின் கையை உடைத்தபோது எடுத்த புகைப்படம் மட்டும் இருந்துள்ளது. இதன் மூலம் அவர் திட்டமிட்டே குழந்தையைத் துன்புறுத்தி வந்தது உறுதியாகியுள்ளது.

முதலில் பிஸ்கட் சாப்பிடும்போது குழந்தை மயங்கி விழுந்ததாக உறவினர்கள் கூறியிருந்தனர். ஆனால், பிரேதப் பரிசோதனை அறிக்கையில் குழந்தையின் அடிவயிற்றில் பலத்த காயங்களும், கையில் முறிவும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து தீவிர விசாரணை நடத்திய போலீசார், தந்தை ஷிஜினைக் கைது செய்து சிறையில் அடைத்து உள்ளனர்.

