திருச்சி மாவட்டம், துறையூர் தாலுகா, பச்சைப்பெருமாள்பட்டி வடக்கு கிராமத்தில் பிரபு என்பவர் கிராம நிர்வாக அலுவலராக கடந்த இரண்டு வருடங்களாக பணிபுரிந்து வருகிறார்.
மேற்படி, இவரது கட்டுப்பாட்டிற்குள் உள்ள வைரபெருமாள்பட்டியை சேர்ந்த கூலித் தொழிலாளி ராமசாமி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரது தாயார் கடந்த 07.12.2025 அன்று இறந்துவிட்டார்.
இது தொடர்பாக கந்தசாமி வாரிசு சான்று கேட்டு இணையத்தில் தகுந்த ஆவணங்களுடன் 24.12.2025 அன்று விண்ணப்பம் செய்துள்ளார்.
இது தொடர்பாக 31.12.2025 அன்று பச்சைப்பெருமாள்பட்டி வடக்கு கிராம நிர்வாக அலுவலர் பிரபுவை அவரது அலுவலகத்தில் சந்தித்தபோது வாரிசு சான்று வழங்க பரிந்துரை செய்ய ரூ.6000 கேட்டு, பின்னர், கந்தசாமி கேட்டு கொண்டதன் பேரில் ரூ.1000 குறைத்து ரூ.5000 லஞ்சமாக கேட்டுள்ளார்.
லஞ்சம் கொடுக்க விருப்பமில்லாத புகார்தாரர் ராமசாமி 02.01.2026 ஆம் தேதி திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, நேற்று 05.01.2026 ஆம் தேதி திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு காவல் கண்காணிப்பாளர் மணிகண்டன் தலைமையில் ஆய்வாளர்கள் பாலமுருகன் மற்றும் குழுவினர்களுடன் இரசாயனம் தடவப்பட்ட லஞ்சப்பணம் ரூ.5000ஐ புகார்தாரரிடம் தந்து அனுப்பி வைத்தனர்.
இந்த பொறி வைப்பு நடவடிக்கையின் போது திருச்சி மாவட்டம், துறையூர் தாலுகா, 35, பச்சைப்பெருமாள்பட்டி வடக்கு கிராம நிர்வாக அலுவலகத்தில், கிராம நிர்வாக அலுவலரான பிரபு, இரசாயனம் தடவப்பட்ட லஞ்சப்பணம் ரூ.5,000ஐ ராமசாமி என்பவரிடமிருந்து, கேட்டு பெற்று வைத்திருந்த போது கையும் களவுமாக பிடிபட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
கிராம நிர்வாக அலுவலர் பிரபு துறையூர் ராமலிங்க நகரில் வசித்து வருகிறார்.
இது குறித்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

