அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு எதிரொலி.திருச்சிக்குள் கனரக வாகனங்கள் நுழைய அதிரடி தடை.
திருச்சி மாநகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், விபத்துகளைத் தவிர்க்கவும் மாவட்ட நிர்வாகம் அதிரடியான போக்குவரத்து மாற்றங்களை அமல்படுத்தியுள்ளது.
திருச்சி – தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில், குறிப்பாகப் பழைய பால்பண்ணை பகுதியில் நிலவி வரும் கடுமையான போக்குவரத்து நெரிசல் மற்றும் தொடர் விபத்துகளைக் கருத்தில் கொண்டு, மாவட்ட ஆட்சியர் சரவணன் அவர்கள் புதிய போக்குவரத்து கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளார். தினமும் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை அனைத்து விதமான கனரக வாகனங்களும் திருச்சி மாநகருக்குள் நுழைய முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மாநகருக்குள் வர வேண்டிய கனரக வாகனங்கள், பால்பண்ணை சந்திப்பு வழியாக வராமல், துவாக்குடி – பஞ்சப்பூர் மார்க்கத்தைப் பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பஞ்சப்பூர் மற்றும் தஞ்சாவூர் இடையே இயக்கப்படும் அனைத்து ‘பாய்ண்ட் டூ பாய்ண்ட்’ (Point to Point) இடைநில்லா பேருந்துகளும், பஞ்சப்பூர் – தஞ்சாவூர் பைபாஸ் (அரைவட்ட சுற்றுச்சாலை) வழியாகவே செல்ல வேண்டும்.
திருச்சி பழைய பால்பண்ணை ரவுண்டானா பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாகப் புகார்கள் எழுந்தது.
இதனைத் தொடர்ந்து, தமிழகப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முனைவர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி டிசம்பர் 23ஆம் தேதி அந்தப் பகுதியில் அதிகாரிகளுடன் நேரில் ஆய்வு நடத்தினார். அதன் தொடர்ச்சியாகவே இந்த அவசர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதிய நடைமுறைகள் சரியாகப் பின்பற்றப்படுகிறதா என்பதைக் கண்காணிக்கவும், ஆய்வு செய்யவும் ஒரு சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. 
இந்தக் குழுவில் வருவாய் கோட்டாட்சியர் (தலைமை), திருவெறும்பூர் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு, மாநகர தெற்கு துணை போலீஸ் கமிஷனர், வட்டாரப் போக்குவரத்து அதிகாரி (RTO) ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் அவ்வப்போது அறிக்கைகளைத் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

