தஞ்சையில பழைய கட்டிடங்களைத் தூய்மைப்படுத்தியபோது, பழங்காலப் பொருட்கள் மற்றும் வியக்கத்தக்க பிரம்மாண்ட பாத்திரங்கள் கண்டெடுக்கப்பட்டது.
தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகத்தில், அரை நூற்றாண்டு காலமாகப் பயன்படுத்தப்படாமல் கைவிடப்பட்ட நிலையில் இருந்த கட்டிடங்களைத் தூய்மைப்படுத்தியபோது, சுமார் 9 லட்சம் ரூபாய் மதிப்பிலான பழங்காலப் பொருட்கள் மற்றும் பிரம்மாண்ட பாத்திரங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதிலுமுள்ள அரசு மருத்துவமனைகளில் தேங்கிக் கிடக்கும் கழிவுகளை அகற்றி, சுகாதாரத்தைப் பேணிக் காக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்ட ‘அரசாணை 4.0’ என்ற சிறப்புத் திட்டத்தின் கீழ் இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதற்கான பணிகளைத் தஞ்சை மருத்துவக் கல்லூரி முதல்வர் (டீன்) மருத்துவர் பூவதி அவர்கள் முன்னின்று நடத்தினார்.
தஞ்சை மருத்துவக் கல்லூரியின் மாணவிகள் விடுதியான ‘பொன்னி விடுதி’க்கு எதிரே சுமார் 5 ஏக்கர் பரப்பளவிலான நிலம் உள்ளது. இந்தப் பகுதி கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக எவ்விதப் பராமரிப்பும் இன்றி, அடர்ந்த செடி, கொடிகளுடன் புதர் மண்டி ஒரு காடு போலவே காட்சியளித்தது. அங்குள்ள இரண்டு பழைய கட்டிடங்கள் நீண்ட காலமாகக் கதவுகள் பூட்டப்பட்டு, மக்கள் நடமாட்டமின்றிப் புதைந்து கிடந்தன. அந்தப் பகுதியில் மர்ம நபர்களின் நடமாட்டம் அல்லது விஷ ஜந்துக்களின் புகலிடமாக மாறிவிடக்கூடும் என்பதைக் கருத்தில் கொண்ட முதல்வர் பூவதி, உடனடியாக அந்தப் பகுதியைச் சீரமைக்க உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து, பொக்லைன் இயந்திரங்களின் உதவியுடன் பல நாட்களாகப் போராடி அந்தப் புதர்கள் அகற்றப்பட்டன.
அப்போது அங்கிருந்த பழங்காலக் கட்டிடத்தின் பூட்டுகளைத் திறந்து அதிகாரிகள் உள்ளே சென்று பார்த்தபோது அவர்களுக்குப் பெரும் ஆச்சரியம் காத்திருந்தது. அந்தக் கட்டிடத்திற்குள் 50 ஆண்டுகளுக்கு முன்பு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைத் தேவைகளுக்காகப் பயன்படுத்தப்பட்ட பிரம்மாண்டமான பாத்திரங்கள் குவித்து வைக்கப்பட்டிருந்தன. செம்பு, பித்தளை மற்றும் உயர்தர அலுமினியத்தால் ஆன அந்தப் பொருட்கள், தற்போதைய காலத்தில் பார்க்க முடியாத அளவுக்கு மிகப்பெரிய அளவிலும், அதிக எடையுடனும் இருந்தன.
இந்தத் தகவல் மாவட்ட ஆட்சியருக்குத் தெரிவிக்கப்பட்டு, தொல்லியல் துறை அதிகாரிகளின் பார்வைக்குக் கொண்டு செல்லப்பட்டது. அதிகாரிகள் அங்கு வந்து ஆய்வு செய்ததில், அந்தப் பொருட்கள் அனைத்தும் அரை நூற்றாண்டுக்கு முந்தைய மருத்துவக் கல்லூரி வரலாற்றின் ஒரு பகுதி என்பதை உறுதிப்படுத்தினர். அங்கு கண்டெடுக்கப்பட்ட 100 லிட்டர் கொள்ளளவு கொண்ட பிரம்மாண்டமான பால் கேன்கள், மிகப்பெரிய அண்டாக்கள், இட்லி பானைகள், தண்ணீர் ஊற்றும் குவளைகள், அலுமினிய டிபன் கேரியர்கள் மற்றும் பழமையான மரச் சாமான்கள் ஆகியவை காண்போரைக் வியப்பில் ஆழ்த்தின.
இந்த அரிய பொக்கிஷங்களைப் பாதுகாக்கும் பொருட்டு, மிகவும் அரிதான மற்றும் வரலாற்றைப் பறைசாற்றும் சில பொருட்களை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் அமையவுள்ள அருங்காட்சியகத்தில் வைக்க முதல்வர் பூவதி முடிவு செய்தார். மீதமுள்ள தேவையற்ற பழைய பொருட்களை முறைப்படி ஏலம் விட உத்தரவிட்டதன்பேரில்,
அவை ஏலமிட்டதில் மருத்துவக் கல்லூரிக்கு 9 லட்சம் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. 50 ஆண்டுகளாகப் புதர் மண்டிக் கிடந்த ஒரு பகுதியைத் தூய்மைப்படுத்தியதன் மூலம், மருத்துவக் கல்லூரிக்கு நிதி ஆதாரமும், வரலாற்றுச் சிறப்புமிக்கப் பொருட்களும் ஒரே நேரத்தில் கிடைத்தது அனைவருக்கும் ஆச்சரியம் கலந்த இன்பத்தை அளித்துள்ளது.

