Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

குழந்தைகளுக்கு குதுகலமான செய்தி : திருச்சியில் விரைவில் வனவிலங்கு பூங்கா .

0

'- Advertisement -

திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுகனூர் அருகே உள்ள எம்.ஆர். பாளையம் என்ற இடத்தில் சுமார் ரூ.120 கோடி செலவில் சர்வதேசத் தரத்திலான புதிய வன உயிரியல் பூங்கா அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கான விரிவான திட்ட அறிக்கை (DPR) தற்போது மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

 

ஆரம்ப முயற்சி: எம்.ஆர். பாளையத்தில் வன உயிரியல் பூங்கா அமைக்கும் திட்டம் முதன்முதலில் 2009-ஆம் ஆண்டு தமிழக அரசால் திட்டமிடப்பட்டது. முதற்கட்டமாகச் சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் சுற்றுச்சுவர் கட்டப்பட்டது.

 

 

 

திட்டம் கைவிடப்படல்: மத்திய அரசின் அனுமதி பெறுவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் மற்றும் சட்டப் பிரச்சினைகள் காரணமாக அந்தத் திட்டம் பின்னர் கைவிடப்பட்டது. தற்போது அந்த இடம் யானைகள் மறுவாழ்வு மையமாகப் பயன்பட்டு வருகிறது. சுமார் 16 ஆண்டுகளுக்குப் பிறகு, திருச்சி மாவட்ட வனத்துறை மீண்டும் எம்.ஆர். பாளையத்தில் வன உயிரியல் பூங்கா அமைப்பதற்கான பணியைக் கையில் எடுத்துள்ளது.

 

சென்னை வண்டலூர் மிருகக்காட்சி சாலை போன்று, யானை, சிங்கம், புலி, மான் உள்ளிட்ட வன விலங்குகள் மற்றும் பறவைகள், ஊர்வன உள்ளிட்ட அனைத்து உயிரினங்களையும் பொதுமக்கள் ஒரே இடத்தில் கண்டு களிக்கும் வகையில் இதை அமைப்பதே இதன் நோக்கம். வனத்துறையின் விரிவான திட்ட அறிக்கைக்கு (DPR) மத்திய உயிரியல் பூங்கா ஆணையத்திடம் ஒப்புதல் கிடைத்ததும், அடுத்த கட்டப் பணிகள் தொடங்கப்படும். இந்த வன உயிரியல் பூங்கா சர்வதேச தரத்தில் அமைக்கப்பட உள்ளது.

 

சிங்கம், புலி, கரடி உள்ளிட்ட அனைத்து வன விலங்குகளும் பொதுமக்களின் பார்வைக்காகக் கொண்டு வரப்படும். தற்போது, வன விலங்குகளை எங்கிருந்து கொண்டு வரலாம் என்பது பற்றிய தகவல்களைச் சேகரிக்கும் பணி நடந்து வருகிறது.

 

விலங்குகள் தங்குவதற்கான இடங்கள், உணவு, சீதோஷ்ண நிலைக்கான மரங்கள் வளர்ப்பு மற்றும் பொதுமக்களின் பாதுகாப்புடன் கூடிய வருகைக்கான திட்ட அறிக்கைகளும் தயாரிக்கப்பட்டுள்ளன என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.