தமிழ்நாட்டில் லஞ்சம் வாங்கி கைதாகும் அரசு அதிகாரிகளின் கைது நடவடிக்கைகள் அதிகரித்தபடி உள்ளது.
பொறுப்புள்ள பதவிகளில் உள்ள அதிகாரிகளே இப்படி லஞ்சம் வாங்கி கைதாகி, நீதிமன்றங்களில் தண்டனைக்குள்ளாகி விடுவது தமிழகத்துக்கே தலைகுனிவாகி வருகிறது. இப்படி லஞ்சம் வாங்கி பொதுவெளியில் அசிங்கப்படுவதில் பெண் அதிகாரிகளும் அடக்கம் என்பது வருத்தத்துக்குரியதாக உள்ளது.
தமிழகத்தில் 2021 முதல் 2025 மார்ச் வரையிலான லஞ்ச ஒழிப்பு போலீசாரின் புள்ளி விவரங்கள் சமீபத்தில் வெளியாகி, பலருக்கும் அதிர்ச்சியை தந்திருந்தது..
, லஞ்சம் வாங்கி கைதானவர்களில் டாப்பில் உள்ளது வருவாய்த்துறைதான்.. அதாவது சர்வே துறையில் மட்டும், 29 பேர் உட்பட தாசில்தார் முதல் தலையாரி வரை மொத்தம், 92 பேர் கைதாகி இருக்கிறார்களாம். 2வது இடத்தில் மின்சார வாரியம் இடம்பெற்றிருந்தது.. மூன்றவாது இடத்தில் உள்ளாட்சி துறையும், அடுத்து பத்திரப்பதிவு துறையும் என அந்த லஞ்சம் லிஸ்ட் அதிர வைத்தது.
அத்துடன், அரசாங்க பணியில் லஞ்சம் வாங்கியவர்களின் பட்டியலில், வருவாய் துறை, மின்வாரியம் முதல் இரண்டு இடங்களை பிடித்திருப்பது, தமிழக மக்களை கவலை கொள்ள செய்தது. அதிலும், விஏஓக்களைவிட, தாசில்தார்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது பொதுமக்களை வருத்தத்துக்கு ஆளாக்கிவிட்டது.
எனினும்கூட, சில அரசு ஊழியர்கள், அதிகாரிகளின் லஞ்ச புகார்கள் குறையாமலேயே உள்ளது.. பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் கேட்கிறார்கள் என்று லஞ்சம் கேட்கிறார்கள் என்று சில நாட்களுக்கு முன்பு தூத்துக்குடி வந்த திமுக எம்பி கனிமொழியிடம், ஒரு பெண் நேரடியாகவே புகார் கூறியிருந்தது நினைவிருக்கலாம்.
இப்போது மீண்டும் ஒரு பெண் தாசில்தார் லஞ்சம் வாங்கி கைதாகி உள்ளார்.. இயற்கை மரணமடைந்த பெண்ணின் ஈமச்சடங்குக்கு அரசு வழங்கும் ரூ.25 ஆயிரத்தை பெற வந்தவரிடம் லஞ்சம் கேட்டிருக்கிறார் இரக்கமே இல்லாத அந்த தனி வட்டாட்சியர்..
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர்கள் பெருமாள் – மலர் தம்பதியர். கடந்த மாதம் உடல்நலம் குன்றி மலர் இறந்துவிட்டார்.. இவரது கணவர் உழவர் பாதுகாப்பு கூட்டுறவு சங்கம் உறுப்பினராக உள்ளார்.
சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளவர்களின் குடும்ப உறுப்பினர்கள் இயற்கை மரணம் அடைந்தால், அவர்களின் ஈமச்சடங்குகளை செய்வதற்காக அரசு ரூ.25 ஆயிரம் உதவித்தொகை வழங்கி வருகிறது. எனவே இந்த தொகையை பெறுவதற்காக மலரின் மகன் சேகர், நாட்றம்பள்ளி சமூக நல பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியரான வள்ளியம்மாவிடம் மனு அளித்துள்ளார்.
ஆனால், அந்த மனுவை பெற்றுக்கொண்ட வள்ளியம்மா, சேகரிடம் ரூ.3,000 லஞ்சமாக கேட்டதாக தெரிகிறது. இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த சேகர், உடனடியாக திருப்பத்தூர் லஞ்ச ஒழிப்பு துறையினரிடம் இதுகுறித்து புகார் தந்துள்ளார்.. இதையடுத்து திருப்பத்தூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி ராஜு, ஆய்வாளர் கௌரி தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினர் இந்த புகாரை விசாரிக்க தொடங்கினர்.
அப்போது அவர்கள் சேகரிடம் ரசாயனம் தடவிய 2000 ரூபாய் பணத்தை லஞ்சம் கேட்ட ஸ்பெஷல் தாசில்தார் வள்ளியம்மாளிடம் கொடுக்கும்படி அறிவுறுத்தினார்கள்.. அதன்படியே வள்ளியம்மாள் ரூ.2000 பணத்தை பெற்றபோது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர் அவரை கையும் களவுமாக பிடித்தனர்.
பிறகு 3 மணி நேரத்திற்கு மேலாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் வள்ளியம்மாளிடம் தீவிர விசாரணையை மேற்கொண்டனர். இந்த விசாரணையின்போது திடீரென வள்ளியம்மாவுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு, மயங்கி விழுந்தார்.. இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு வள்ளியம்மா அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை வள்ளியம்மாவுக்கு நடந்து வருகிறது.. அப்போது வள்ளியம்மா, என்னை கொன்னுடுங்க சார் என்று புலம்பி கொண்டு இருந்தாராம்.

