தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா குறித்து அவரின் குடும்ப உறுப்பினரான சார்லஸ் மார்ட்டின் பேசியுள்ள கருத்துக்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தங்களின் குடும்ப தொழிலை கைப்பற்ற ஆதவ் அர்ஜுனா முயற்சித்ததாக கூறிய அவர், திமுக தரப்பில் விஜய் பக்கம் அனுப்பப்பட்ட ஆள் தான் ஆதவ் அர்ஜுனா என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளராக செயல்பட்டு வருபவர் ஆதவ் அர்ஜுனா. தவெகவில் இணைவதற்கு முன்பாக விசிகவில் துணை பொதுச்செயலாளராக செயல்பட்டு வந்த ஆதவ் அர்ஜுனா, கூட்டணியில் இருந்து கொண்டே திமுகவை விளாசினார். இதனால் விசிகவில் இருந்து ஆதவ் அர்ஜுனா தற்காலிகமாக நீக்கப்பட்டார்.
இதன்பின்னரே தவெகவில் ஆதவ் அர்ஜுனா இணைந்தார். இதன்பின் முழுக்க முழுக்க திமுகவை அட்டாக் செய்து வரும் ஆதவ் அர்ஜுனா, பிரபல தொழிலதிபரான லாட்டரி மார்ட்டினின் மருமகன். இந்த நிலையில் ஆதவ் அர்ஜுனா குறித்து லாட்டரி மார்ட்டினின் மகன் சார்லஸ் மார்ட்டின் பேசியுள்ள கருத்துக்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
அதில் சார்லஸ் மார்ட்டின் பேசுகையில், ஆதவ் அர்ஜுனா எங்கள் குடும்பத்திற்குள் வந்ததும் தொழிலை கைப்பற்ற வேண்டும் என்று முயற்சித்தார். எங்களின் அனைத்து நிறுவனங்களையும் ஓவர்டேக் செய்ய முயற்சிகள் மேற்கொண்டார். இதனால் எங்களுக்கு இடையில் முரண்பாடு வந்தது. இதனால் முதலில் குடும்பத்திற்கு சண்டையை உருவாக்கினார். அவரால் நானும், என் தந்தையும் 2 ஆண்டுகள் பேசாமல் இருக்க வேண்டிய நிலை வந்தது.
அதன்பின் வியூக வகுப்பாளராக திமுகவிற்கு சென்றவர், முதல்வர் ஸ்டாலினின் மாப்பிள்ளை சபரீசனுக்கும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கும் இடையில் மோதலை ஏற்படுத்த முயன்றார். குடும்பத்திற்குள் பிரச்சனையை உருவாக்க நினைத்த அவர், ஒரு கட்டத்தில் திமுகவை கையில் எடுக்க வேண்டும் என்று ஆலோசனைகளை வழங்கினார்.
இதனால் அவரை ஸ்டாலின் குடும்பத்தினர் வெளியேற்றினர். அங்கிருந்து விசிகவுக்கு சென்ற அவர், திருமாவளவன் மீறியும், விசிகவை மீறியும் செயல்பட தொடங்கினார். அவரின் முடிவுக்கு கட்சி செயல்பட வேண்டும் என்று நினைத்தார். இதனை புரிந்து கொண்டு, விசிகவில் இருந்து திருமாவளவன் வெளியேற்றினார்.
தற்போது தவெகவில் இணைந்துள்ளார். அங்கும் ஆதவ் அர்ஜுனா தன்னையே முன்னிலைப்படுத்தி வருகிறார்.
ஜான் ஆரோக்கியசாமியையும், ஆதவ் அர்ஜுனாவையும் தவெகவிற்கு அனுப்பியதே திமுக தான். தவெக எந்த கூட்டணியிலும் சேராமல் தனியாக இருக்கும்படி பார்த்து கொள்வதற்காக அனுப்பி வைக்கப்பட்டவர் தான் ஆதவ் அர்ஜுனா. விஜய் வேறு கூட்டணிக்கு செல்லாமல் இருந்தாலே, மீண்டும் ஆட்சியை பிடித்துவிடலாம் என்பதே திமுகவின் கணக்கு என்றும் தெரிவித்துள்ளார்.

