அடுக்குமாடி குடியிருப்பை சுற்றி உள்ள கேட்களில் பாட்டிலில் நீலநிற தண்ணீர் நிரப்பி திடீரென கேட்டில் தொங்கவிடப்பட்டுள்ளது எதற்கு தெரியுமா?
சென்னை சாலிகிராமத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை சுற்றி உள்ள கேட்களில் சிறிய பாட்டிலில் நீலநிற தண்ணீர் நிரப்பி கேட்டில் தொங்கவிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பான போட்டோக்கள் இணையதளங்களில் வெளியாகி உள்ள நிலையில் அதன் பின்னணி குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகம் உள்பட நாடு முழுவதும் தெருநாய்களின் தொல்லை அதிகரித்துள்ளது. சாலைகளில் செல்வோரை விரட்டி விரட்டி தெருநாய்கள் கடிப்பதோடு, வாகனங்களில் செல்வோரையும் விரட்டி வருகிறது. இதற்கு சென்னையும் விதிவிலக்கல்ல.
சென்னையிலும் தெருநாய்களின் தொல்லை அதிகரித்துள்ளது. சில இடங்களில் வீட்டு கதவுகள் திறந்து வைத்திருந்தால் உள்ளே தெருநாய்கள் நுழைந்து விடுகின்றன.
இதனால் தெருநாய்களை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மக்கள் மாநகராட்சி நிர்வாகம் மற்றும் அரசிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில் தான் சென்னை சாலி கிராமத்தில் உள்ள 3 அடுக்குமாடி குடியிருப்புகளில் தெருநாய்கள் மற்றும் பூனைகள் நுழைவதை தடுக்க மக்கள் வித்தியாசமான செயலை முன்னெடுத்துள்ளனர்.
அதன்படி சாலி கிராமத்தில் உள்ள 3 அடுக்குமாடி குடியிருப்புகளின் கேட் கதவுகளில் சிறிய பாட்டில்களில் நீலநிற தண்ணீர் நிரப்பி கட்டி தொங்கவிடப்பட்டுள்ளது. காவேரி ரங்கன் நகர் எம்ஜிஆர் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளை சேர்ந்தவர்கள் தான் இப்படி செய்துள்ளனர்.
அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்துக்குள் தெருநாய்கள், பூனைகள் நுழைந்து மக்களை அச்சுறுத்தியதோடு, அந்த இடத்தை அசுத்தம் செய்து செல்கின்றன. இதனை தடுக்க தான் அவர்கள் சிறிய பாட்டிலில் நீலநிற தண்ணீரை கட்டி தொங்கிவிட்டுள்ளனர். இப்படி செய்வதன் மூலமாக தங்கள் வளாகத்துக்குள் தெருநாய்கள், பூனைகள் நுழையாது என்பது அவர்களின் நம்பிக்கை.

இதுபற்றி அங்குள்ள காவலாளி கூறுகையில், ”நீலநிற தண்ணீர் பாட்டில்களை கட்டி தொங்கவிட்ட பிறகு தெருநாய்கள், பூனைகளின் தொல்லை இல்லை” என்று கூறினார். ஆனால் அங்கு வசிக்கும் மக்கள் இதனை மறுக்கின்றனர். ”தெருநாய்கள், பூனைகள் இப்போது வளாகத்துக்குள் வந்து அசுத்தம் செய்கின்றன” என்றார்.
சென்னை சாலிகிராமம் மட்டுமின்றி பல இடங்களில் இப்படியான நம்பிக்கை உள்ளது. வீடுகள் முன்பு பாட்டிலில் நீலநிற தண்ணீரை வைப்பதன் மூலம் தெருநாய், பூனைகள் வராது என்று இத்தகைய செயல்களை செய்து வருகின்றனர் ஆனால் அறிவியல் பூர்வமாக இது நிரூபிக்கப்படவில்லை.
இருப்பினும் கூட அங்குள்ள பலரும் ஆணித்தனமாக நம்புகின்றனர். இதற்கு அந்த 3 அடுக்குமாடி குடியிருப்புகளின் கேட்டுகளில் வரிசையாக ஏராளமான பாட்டில்கள் நீலநிற தண்ணீர் நிரப்பி கட்டி தொங்கவிடப்பட்டுள்ளதே சான்றாக உள்ளது.

