திருவெறும்பூர் அருகே சளி மூச்சு திணறல் காரணமாக ஒன்றரை வயது பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
திருவெறும்பூர் அருகே உள்ள அசூர் எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 38). இவரது மனைவி புவனேஸ்வரி (வயது 32). இவர்களுக்கு ஆண் குழந்தையும், ஒன்றரை வயதில் வினோதினி என்ற பெண் குழந்தையும் இருந்தது. இந்நிலையில் வினோதினிக்கு செவ்வாய்க்கிழமை அன்று திடீரென உடல் நலம் சரியில்லாமல் மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது.
இதனால் துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், சிறுமியை மேல் சிகிச்சைக்காக திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு குழந்தையை பரிசோதித்த அரசு மருத்துவர்கள் சிறுமி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இச்சம்பவம் குறித்து பழனிச்சாமி துவாக்குடி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 
						
 
						
