தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரலாக கனமழை பெய்து வரும் நிலையில் நாளைய தினம் 5 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை ஆரம்பம் முதலே அதிரடி காட்டத் தொடங்கி உள்ளது. திபாவளி தினத்தில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் வெளுத்து வாங்கிய கனமழையால் பலரும் பட்டாசு வெடிக்க முடியாமல் தவித்தனர். பின்னர் கிடைக்கக்கூடிய நேரங்களில் பட்டாசுகளை வெடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இந்நிலையில் இன்றும் தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் பரலாக கனமழை பெய்து வருகிறது. விழுப்புரம், கடலூர், காரைக்கால், புதுச்சேரி, மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை வெளுத்து வருகிறது.
இதனிடையே கனமழை தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் வீடியோ காலில் ஆலோசனை மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின், “மழை அதிகமாக பெய்துள்ள மாவட்டங்களில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார். தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லவும், முகாம்களில் உணவு, குடிநீர், மருத்துவ வசதிகளை செய்து கொடுக்கவும் உத்தரவிட்டுள்ளது. மேலும் மழை நீர் தேங்கும் பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்துமாறு ஆட்சியர்களுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
மழையின் வீரியம் இன்று போலவே நாளையும் அதிகமாக இருக்கும் என்று தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம் செங்கல்பட்டு, விழுப்புரம், மயிலாடுதுறை, கடலூர், புதுச்சேரி ஆகிய மாவட்டங்களுக்கு நாளை மிக கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் 20 செ.மீ.க்கு அதிகமாக மழைப் பொழிவு இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இதே போன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிபேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருவாரூர், தஞ்சாவூர், நாகை, காரைக்கால் ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்டும், வேலூர், திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், திருச்சி ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.