ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதிலிருந்து திருச்சி மாநகரில் இருசக்கர, மூன்று சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் கடந்த மே மாதம் 15ஆம் தேதி முதல் ஜுன் 5ஆம் தேதி கடந்த 22 நாட்களில் 6610 இருசக்கர வாகனங்கள், 188 மூன்று சக்கர வாகனங்கள், 73 நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 6871 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து வாகனங்களும் திருச்சி கே.கே.நகர் மாநகர ஆயுதப்படை மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
அவ்வப்போது வாகனங்களின் பாதுகாப்பு கருதி வஜ்ரா வாகன உதவியுடன் தண்ணீர் தௌிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் இன்று முதல் ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளதால் வாகனங்கள் திருப்பி ஒப்படைக்க மாநகர போலீசார் நேற்று அறிவித்தனர்.
இன்று முதற்கட்டமாக 15 நாட்களுக்கு முன்னர் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் பணி தொடங்கியது.
தினந்தோறும் தகுந்த நேர இடைவெளியில் நாள் ஒன்றுக்கு அதிகபட்சம் 250 வாகனங்கள் ஒப்படைக்கப்பட உள்ளது.
அதன் பின்னர் படிப்படியாக தேதி வாரியாக பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் படிப்படியாக உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.