பஞ்சப்பூர் புது பஸ் நிலையத்தில் பரிதாபம் :
தூங்கிக்கொண்டிருந்த திருநங்கை பஸ் ஏறி உடல் நசுங்கி சாவு.
திருச்சி போக்குவரத்து போலீசார் விசாரணை.
திருச்சி மாவட்டம் மணப்பாறை பன்னாங்கொம்பு தெற்கு தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மகள் லாவண்யா ஸ்ரீ (வயது 27). திருநங்கையான இவர் திருச்சி பஞ்சப்பூர் புதிய பஸ் நிலையம் முதல் நுழைவாயில் அருகில் பார்க்கிங் பிளாட்பார்மில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அருகில் ஒரு தனியார் பஸ் நின்று கொண்டிருந்தது. திருநங்கை தூங்கிக் கொண்டிருந்ததை கவனிக்காமல் பஸ் டிரைவர் பஸ்சை எடுத்தார். அப்போது பஸ் சக்கரத்தில் சிக்கிய திருநங்கைக்கு முகம், தலை, வயிறு உள்ளிட்ட உடல் பாகங்கள் நசுங்கி பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அவரை மீட்டு திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் பரிசோதித்த டாக்டர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து திருச்சி தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜகணேஷ் வழக்குப்பதிந்து தனியார் பஸ் டிரைவர் குளித்தலையைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பவரை கைது செய்தார். மேலும் தனியார் பஸ்சும் பறிமுதல் செய்யப்பட்டது.