Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ஒரு திட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகைக்குள் அத்திட்டத்தை முடித்து விட்டு, மீதமிருக்கும் பணத்தை கஜானாவில் சேர்த்த ஒரே முதல்வர் காமராஜர் தான்.உலகத்திலேயே எந்த முதலமைச்சரும் செய்ததில்லை, செய்யப் போவதுமில்லை . மேலும் அவரைப் பற்றி தெரியாத சில தகவல்கள் ….

0

'- Advertisement -

 

கர்ம வீரர், பெருந்தலைவர் காமராஜர் என்று இன்றைய தலைமுறையும் காமராஜரைக் கொண்டாடுகிறது. அந்த மாபெரும் தலைவரின் சாதனைகளை இந்த தலைமுறையினரும் நினைவு கூர்வது அதுவும் அவரது 123 வது பிறந்தநாளான இன்று எத்தனைப் பொருத்தம்.

 

கரம்பை மண்ணும், கொளுத்தும் வெய்யிலும், கரிசல் காடும், வானம் பார்த்த பூமியுமாக இருந்த அன்றைய விருதுநகரில் பிறந்த காமராஜர் முதலமைச்சராக வலம் வந்த போது, மொத்த இந்தியாவுமே தமிழகத்தைத் திரும்பி பார்த்தது. அவரின் சிந்தனையில், மக்களின் பயன்பாட்டிற்காக, நலனுக்காக உதித்த எண்ணற்ற திட்டங்கள் தான் இன்று வரையில் தமிழர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி பிடித்துக் கொண்டிருக்கிறது.

 

தேர்தலில் ஒரு முறை தோல்வியைத் தழுவினார் காமராஜர். காமராஜரையே மக்கள் தோல்வியடைய வைத்தார்கள் என்று தான் வரலாறு இன்று வரையில் அதன் பக்கங்களில் கறுப்பு மையினால் எழுதிக் கொண்டிருக்கிறது. அந்த சமயத்தில், ‘படிக்காத காமராஜரை படித்த சீனிவாசன் தோற்கடித்தார்’ என்று திமுகவினர் போஸ்டர் அடித்து ஒட்டினார்கள். திமுகவினரின் இந்த சுவரொட்டி கலாசாரத்தைப் பார்த்துக் கொதித்தெழுந்தார் ஒரு தலைவர். தனது சொந்த பணத்தில், ‘படிக்காத காமராஜர் கட்டிய பள்ளிக்கூடத்தில் படித்த சீனிவாசன் தேர்தலில் வெற்றி’ என்று விருதுநகர் முழுவதும் சுவரொட்டி அச்சடித்து ஒட்டினார். அந்த தலைவர் தந்தை பெரியார்.

ஆம், அது தான் காமராஜரின் வெற்றி. மக்கள் மனதில் இன்றளவிலும் காமராஜர் நீங்கா இடம் பெற்றிருக்கிறார். அவரை தேர்தலில் தோற்கடித்த சீனிவாசனின் பெயரை காலமும், வரலாறும் மறந்து விட்டது. தமிழகத்தின் கல்வி கண்களைத் திறந்த தலைவராக காமராஜரைக் கொண்டாடுகிறோம். ராஜாஜியின் குலக்கல்வித் திட்டத்தால் ஏறக்குறைய தமிழகம் முழுவதும் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகள் மூடு விழா கண்டன. காமராஜரின் நடவடிக்கையால் அந்த 6000 பள்ளிகளும் மீண்டும் திறப்பு விழா கண்டன. 1954 தொடங்கி 1963 வரையிலான காமராசரின் ஆட்சிகாலம் தமிழகத்தின் பொற்காலம் என்றே இன்றளவும் புகழப்படுகிறது. அவர் ஆட்சி பொறுப்பேற்ற போது 5 ஆயிரத்து 303 ஆக இருந்த ஆரம்ப பள்ளிகளின் எண்ணிக்கை, பத்தே ஆண்டுகளில் 26 ஆயிரத்து 700 ஆக உயர்த்தப்பட்டது. மக்களின் உண்மையான முன்னேற்றம் என்பது அவர்களது கல்வி அறிவை மேம்படுத்துவது தான் என்கிற முயற்சியில், அவரது ஆட்சி காலத்தில் தான் உயர்நிலைப் பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சிக் கல்லூரிகள் என திரும்பி திசையெங்கும் கல்வி நிலையங்களாக அறிவொளி வீசிப் பறந்தன.

 

‘நெய்வேலி நிலக்கரித் திட்டம்’, ‘பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலை’, ‘திருச்சி பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ்’, ‘கல்பாக்கம் அணு மின்நிலையம்’, ‘ஊட்டி கச்சா ஃபிலிம் தொழிற்சாலை’, ‘கிண்டி டெலிபிரிண்டர் தொழிற்சாலை’, ‘மேட்டூர் காகிதத் தொழிற்சாலை’, ‘சேலம் இரும்பு உருக்கு ஆலை’, ‘பாரத மிகு மின் நிறுவனம்’, ‘இரயில் பெட்டித் தொழிற்சாலை’, ‘நிலக்கரி புகைப்படச் சுருள் தொழிற்சாலை’ என பல தொழிற்சாலைகளை உருவாக்கியவர் காமராஜர்.

 

தாகத்தால் தவித்த தமிழக மக்களின் தாகம் போக்க குமரி மாவட்டத்தில் மாத்தூர் தொட்டிப் பாலம், காவேரி டெல்டா வடிகால் அபிவிருத்தி திட்டம்,மணிமுத்தாறு, அமராவதி, வைகை, சாத்தனூர், கிருஷ்ணகிரி, ஆரணியாறு ஆகிய ஆறுகளின் குறுக்கே அணைகளைக் கட்டி நீரியல் மேலாண்மைக்கு வித்திட்டவர் காமராசர்.

 

இதுபோக கன்னியாகுமரி நெய்யாறு திட்டம், கோவை பரம்பிக்குளம் -ஆழியாறு திட்டம், பவானி அணை, மேட்டூர் அணை என வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படும் நீர்ப்பாசன திட்டங்களையும் ஆயிரத்து 600 ஏரிகளையும் வெட்டி, இன்றளவும் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளின் பாசனத் திட்டங்களுக்கு முன்னோடித் தலைவராக இருப்பவரும், இருந்தவரும் காமராசர்தான்.

 

பிரதமர் பதவியை தமக்கு வேண்டாமெனத் தூக்கி எறிந்து லால் பகதூர் சாஸ்திரியையும், இந்திராவையும் பிரதமராக்கி கிங் மேக்கராக வலம் வந்த காமராசருக்கு வாரிசுகள் என யாரும் இல்லை. உலகத்திலேயே வேறு எந்த முதலமைச்சரும், ஒரு திட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகைக்குள் அந்த திட்டத்தை முடித்து விட்டு, மீதமிருக்கும் பணத்தை அரசாங்க கஜானாவில் சேர்த்ததில்லை. காமராஜரின் ஆட்சி காலத்தில் இந்த அதிசயமும் நிகழ்ந்தது. அணை கட்ட ஒதுக்கப்பட்ட தொகையில் மீதம் பிடித்து, அந்த பணத்தையும் அரசாங்க கஜானாவில் சேர்த்தார்.

 

சினிமா நட்சத்திரங்கள் புகழின் உச்சாணியில் இருந்த காலம் அது. சென்னை கோடம்பாக்கத்தின் மேம்பாலம் எல்லாம் இல்லாமல் ரயில்வே சிக்னலுக்காக மணி கணக்கில் நடிக, நடிகையர்கள் காத்திருந்தார்கள். ஒரு முறை காமராஜரிடம், ‘சிக்னலுக்காக காத்துக்கிட்டு இருக்கும் போது கூட்டம் அதிகமாக கூடி விடுகிறது. ரசிகர்கள் சூழ்ந்துக் கொள்கிறார்கள். அங்கே ஒரு மேம்பாலம் கட்டினால் நல்லாயிருக்கும்’ என்று கோரிக்கை வைத்தார்கள் கலையுலகத்தினர்.

பொறுமையாக அவர்கள் சொல்வதைக் கேட்டு விட்டு, ‘நிறைய சம்பாதிக்கிறீர்கள்… உங்கள் தனிப்பட்ட வசதிக்காக மேம்பாலம் கட்டச் சொல்கிறீர்கள். நீங்கள் எல்லாம் சேர்ந்து ஏன், அங்கே மேம்பாலம் கட்டுவதற்கான செலவு தொகையை பங்கிட்டுக் கொள்ள கூடாது?’ என்று திருப்பி கேட்டார். அப்படி உருவானது தான் கோடம்பாக்கம் மேம்பாலம்.

 

இப்படியெல்லாம் வாழ்ந்த தலைவர் தான், தனது இறுதி காலத்தில் தனக்கென எதையும் சேர்க்காமல், 4 கதர் வேட்டிகள், 4 கதர் சட்டைகள். அதிலும் ஒன்று கிழிந்தது, கையிருப்பாக 350 ரூபாய் ரொக்கப்பணத்துடன் மண்ணுலகில் இருந்து அவர் உடல் மறைந்தது ஆனால் தமிழகத்தில் அவர் புகழ் என்றும் நிலைத்திருக்கும் .

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.