திருச்சி: சென்னையில் கெடுபிடி அதிகரித்துள்ள நிலையில் திருச்சி விமான நிலையம் பக்கம் தங்களின் பார்வையை திருப்பியுள்ள சர்வதேச கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் வேலையில்லா இளைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களை குருவிகளாக மாற்றி வருகின்றனர்.
அப்படி பாங்காங்கிற்கு பறந்த குருவி திருச்சிக்கு வந்தபோது ரூ.10 கோடி மதிப்பு கஞ்சாவுடன் சிக்கியுள்ளார்.
திருச்சி விமான நிலையத்தில் தங்கம், உயர்ரக போதைப் பொருட்கள், வெளிநாட்டு கஞ்சா ஆகியவை கடத்தப்பட்டு வரும் சம்பவங்கள் தொடர் கதை ஆகி வருகிறது. இந்நிலையில் திருச்சி விமான நிலையத்திற்கு வந்த பயணி ஒருவரின் செயல்கள் சந்தேகத்தை எழுப்ப அவரை தீவிரமாக சோதனை செய்தபோது ரூ.10 கோடி மதிப்புள்ள உயர்ரக கஞ்சா சிக்கியுள்ளது. பாங்காங்கில் இருந்து இலங்கை வழியாக அந்த கஞ்சா கடத்தப்பட இருந்தது தெரிய வந்துள்ளது. சர்வதேச போதை பொருள் கடத்தல் கும்பலுடன் சிக்கிய அந்த குருவிக்கு தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.
திருச்சி, சென்னை விமான நிலையங்களில் அடிக்கடி போதை பொருட்கள், தங்கம் போன்றவற்றை கடத்தி வருபவர்கள் சிக்கி வருகின்றனர். சென்னையில் கெடுபிடி அதிகமானதால் தற்போது கடத்தல்காரர்களின் பார்வை திருச்சி ஏர்போர்ட் பக்கம் திரும்பி இருக்கிறது. இலங்கை, துபாய், பாங்காங் உள்ளிட்ட பகுதிகளுக்கு திருச்சியில் இருந்து விமானங்கள் இயக்கப்படுவது கடத்தல்காரர்களுக்கு வெகு சௌகரியமாக மாறிவிட்டது. இதனால் திருச்சியை குறிவைத்து குருவிகளை தலைவர்கள் இயங்கி வருகின்றனர்.
கடந்த சில மாதங்களில் மட்டும் கிலோ கணக்கிலான தங்கம், ஹைட்ரோபோனிக் கஞ்சா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதே இதற்கு சாட்சி. இந்நிலையில் திருச்சி விமான நிலையத்தில் அடிக்கடி வெளிநாட்டில் இருந்து கடத்திவரப்பட்ட உயர்ரக ஹைட்ரோபோனிக் கஞ்சாவை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர். அதன் மதிப்பு மட்டும் பத்து கோடி ரூபாய் இருக்கும் என்கிறார்கள். பாங்காக்கில் இருந்து கொழும்பு வழியாக திருச்சிக்கு உயர் ரக கஞ்சா கடத்தப்படுவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து அந்த விமானத்தில் வந்த பயணிகளை போலீசார் தீவிர சோதனைக்கு உள்ளாக்கினர். அதில் 30 வயதுடைய வாலிபரின் செயல்பாடுகள் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அவர் பாங்காக் சென்று விட்டு உடனே திரும்பியதும் சந்தேகத்தை வலுப்படுத்தி உள்ளது. இதை அடுத்து அவரது உடைமைகளை சோதித்த போது அதில் சுமார் ஒன்பது கிலோ எடை கொண்ட ஹைட்ரோபோனிக் உயர் ரக கஞ்சா இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து ஒன்பது கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த அதிகாரிகள் அந்த பயணியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் சர்வதேச மதிப்பு 10 கோடி ரூபாய் எனக் கூறப்படுகிறது.
சர்வதேச போதை பொருள் கடத்தல் கும்பல் தொடர்பில் உள்ள அந்த நபர் குருவியாக செயல்பட்டு வந்திருக்கிறார் என்று தெரிய வந்துள்ளது. இவர் இதற்கு முன்பு ஏற்கனவே பலமுறை இவர் கஞ்சா, தங்கம் உள்ளிட்டவற்றை கடத்தி வந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக அதிகாரிகள் தரப்பில் கூறியதாவது:
சர்வதேச கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் வேலையில்லா இளைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களை குருவிகளாக மாற்றுகின்றனர். துபாய், பாங்காக் உள்ளிட்ட பகுதிகளுக்கு அவர்களை அனுப்பி அங்கிருந்து கஞ்சா, போதை பொருட்கள், தங்கம் உள்ளிட்டவற்றை கடத்தி வருகிறார்கள். வேலை முடிந்ததும் அவர்கள் தங்களின் வீட்டுக்கு சென்று விடுவார்கள். அவர்களது வங்கி கணக்கில் பணம் ஏறிவிடும். எங்கு செல்கிறார்களோ அங்கு செல்வதற்கான விசா, விமான டிக்கெட் முகவரி போன்றவை வழங்கப்படும். குருவிகள் அங்கு சென்றவுடன் பொருட்களை பெற்றுக் கொண்டு உடனடியாக திரும்பி விடுவார்கள். அந்த கும்பல் குறித்த தகவல்களை பெற முடியாது. அந்த அளவுக்கு ரகசியமாக நெட்வொர்க் அமைத்து அவர்கள் செயல்பட்டு வருகிறார்கள்.
இதனால் விமான நிலையங்களில் கூடுதல் கண்காணிப்பை மேற்கொண்டு வருகிறோம். கடந்த சில மாதங்களில் மட்டும் திருச்சி விமான நிலையத்தில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள தங்கம், உயர்ரக கஞ்சா, ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. தொடர் கண்காணிப்பு காரணமாக கடத்தல்காரர்களின் நடமாட்டம் குறைந்து இருந்த நிலையில் தற்போது மீண்டும் ஆரம்பித்துள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். படித்துவிட்டு வேலையில்லாமல் உள்ள வாலிபர்களே கடத்தல்காரர்களின் இலக்காக உள்ளது. வெளிநாடு செல்வது என்பதால் போதுமான படிப்பறிவு இருக்க வேண்டும் என்பதால் இவ்வாறு தேர்வு செய்கின்றனர். ஒரு முறை குருவியாக பறந்துவிட்டு வந்தால் கை நிறைய பணம் கிடைக்கிறது என்பதற்காக வாலிபர்கள் எதையும் செய்ய துணிகின்றனர் என்று வான் நுண்ணறிவு போலீசார் தரப்பில் தெரிவித்துள்ளனர் .