29 வருடங்களாக புதுப்பிக்கப்படாத திருச்சி மாநகராட்சியின் மாஸ்டர் பிளான். செயல்படுமா? திருச்சி அமமுக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் கேள்வி
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் முடிவில்,
மாநகராட்சி ஆணையரிடம் வழங்கப்பட்டுள்ள கோரிக்கைகள் விபரம்….
மாநகராட்சி ஆணையர் அவர்கள்,
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி.
பொதுமக்கள் நாள்தோறும் சந்திக்கும் இன்னல்களை போக்கவும் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் – கோரி.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகப் பொது செயலாளர், TTV தினகரன் அவர்களின் ஆணைக்கிணங்க, பின்வரும் கோரிக்கை மனு அளிக்கின்றோம்.
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள், கடந்த சில வருடங்களாக கடுந்துயருக்கு ஆட்பட்டுள்ளார்கள். அவர்களின் அடிப்படை வாழ்வாதாரமே ஆட்டம் கொண்டுள்ளதால், பொருளாதார ரீதியாகவும் பாதிக்கபட்டுளார்கள். முக்கியமாக:
1.மாநகராட்சிக்கு உட்பட்ட பல பகுதிகளிலும் வழங்கப்படும் சுகாதாரமற்ற குடிநீர்.
உறையூர் மற்றும் ஸ்ரீரங்கம், திருவானைக்கோவில் பகுதிகளில் கலங்களாகவும், கலப்படமாகவும் வரும் குடிதண்ணீர்.
சில இடங்களில் சுத்தம் செய்யப்படாத தண்ணீர் தொட்டிகளாலும், சில இடங்களில் தரமில்லாத பைப்புகளை உபயோகிப்பதால் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் கலப்படமாகிறது என்று பொதுமக்கள் கூறுகின்றனர்.
பொதுமக்களின் அச்சத்தைப் போக்கி அவர்களுக்கு சுகாதாரமான குடிநீரை வழங்க வேண்டும்
2.வருடக்கணக்கில், எவ்வித வேலையும் நடைபெறாத மேரிஸ் தியேட்டர் மேம்பாலம்.
புதிய மேம்பாலம் அமைப்போம் என்று கூறி நிதி ஒதுக்கி, அவசரம் அவசரமாக போக்குவரத்தை நிறுத்தி கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாகிறது.
மேம்பாலப் பணிகளில் தொய்வு ஏற்பட்டதாகவும், அதை மாவட்ட ஆட்சியர் பேசி சரி செய்வார் என்றும் கடந்த ஆகஸ்ட் மாதம் 2024-ல் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே என் நேரு கூறியிருந்தார். ஆனால் அதன் பிறகு எந்த ஒரு பணியும் நடைபெறவில்லை.
இதனால் பொதுமக்களின் நேரம் மற்றும் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
3. மக்களின் எதிர்ப்பையும் மீறி பஞ்சப்பூர் பசுமை பூங்காவில் வெட்டப்பட்டு வரும் மரங்கள்.
திருச்சி மக்களின் தேவையை, எவ்வித தட்டுப்பாடும் இல்லாமல் பூர்த்தி செய்யும் விதமாக காந்தி மார்க்கெட் இயங்குகிறது. புதிதாக ஒரு மார்க்கெட்டை உருவாக்க வேண்டிய அவசியம் இல்லை.
அதே போல, ஒரே இடத்தில் (பஞ்சப்பூர்) பேருந்து நிலையமும், மார்க்கெட்டும் அருகருகே அமைந்தால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.
உலக நாடுகளில் பலவும், புதிதாக பூங்காக்களை மாநகராட்சி பகுதிகளில் உருவாக்கிக் கொண்டிருக்கும் வேளையில், புதிதாக உருவாகி வரும் பஞ்சப்பூர் பேருந்து நிலையத்திற்கு எதிரில், மாணவர்கள், இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் தொழிலதிபர்கள் உதவியினால் உருவாக்கப்பட்ட பசுமை பூங்காவை அழித்தொழிக்கும் முடிவை கைவிட வேண்டும்.
4. ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பயன்படுத்தும் உறையூர் மீன் மார்க்கெட்டில் வசூலிக்கப்படும் அநியாய நுழைவு கட்டணம்.
உறையூர் காசிவிளங்கி மொத்த மீன் சந்தையில், பொதுமக்களின் இருசக்கர வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் பத்து ரூபாய் என்று அறிவித்துள்ளார்கள்.
அதேபோல மீன்களைக் கொண்டு வரும் வாகனங்களுக்கு 100 ரூபாய் நுழைவு கட்டணம் என்பதை தற்போது ஒரு மணி நேரத்திற்கு 100 ரூபாய் என அடாவடியாக உயர்த்தப்பட்டு ஒப்பந்ததாரர்கள் வசூல் செய்து வருகின்றனர்.
மீன் சந்தையை பயன்படுத்தும் ஏழைகள் மற்றும் நடுத்தர மக்கள், சிறு வியாபாரிகளை பாதிக்கும் நுழைவு கட்டணத்தை உடனடியாக வாபஸ் வாங்க வேண்டும்.
5. கிட்டத்தட்ட 20 வருடங்களாக புதுப்பிக்கப்படாத திருச்சி மாநகராட்சியின் மாஸ்டர் பிளான்.
தமிழகத்தின் முக்கிய மாநகரமான திருச்சிக்கு, கடைசியாக போடப்பட்ட மாஸ்டர் பிளான் (Master Plan), 29 ஆண்டுகளுக்கு முன்னர் போட்டது (1996-2016). அதன் ஆயுட்காலம் முடிந்ததே கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் ஆகிவிட்டது.
• இதற்கு காரணம், பலம் பொருந்தியவர்களுக்கு ஏற்றவாறு, அவர்களின் இடங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் மாற்றம் செய்கிறார்களோ என்று பொதுமக்கள் கருதுகிறார்கள்.
• இந்த 29 ஆண்டுகளில், திருச்சியில் ஏற்பட்டுள்ள நிலப்பரப்பு, மக்கள் தொகை மாற்றங்களை கருத்தில் கொண்டு, வெறும் ட்ராப்ட்டுடன் நின்றுவிடாமல், உடனடியாக புதிய மாஸ்டர் பிளான் (Master Plan) வெளிவர ஆவண செய்யவேண்டும்.
மேற்குறிப்பிட்டுள்ள, வரி செலுத்தும் பொதுமக்கள் சந்திக்கும் பிரச்னைகளை உடனடியாக களைந்து, அவர்களின் சுகாதாரம் மற்றும் பொருளாதாரத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாதவாறு நடவடிக்கை மேற்கொள்ளவேண்டி கேட்டுக்கொள்கிறோம்.
என திருச்சி தெற்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழக செயலாளர் செந்தில்நாதன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் முடிவில் மாநகராட்சி ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது .