மணப்பாறையில் சத்துணவு சாப்பிட்ட மாணவ மாணவிகளுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு. காரணம் கரப்பான் பூச்சி மருந்தா ?
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மருங்காபுரி வட்டாரத்தில் உள்ள ஆரியக்கோன்பட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
இந்த பள்ளியில் 53 மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று மதியம் பள்ளியில் கலவை சாதம் வழங்கப்பட்டது. இதையடுத்து சத்துணவு சாப்பிட்ட மாணவ , மாணவிகளில் சிலருக்கு திடீரென வாந்தி ,வயிற்றுப் போக்கு ஏற்பட்டது.
இதையறிந்த ஆசிரியர்கள் உடனே பெற்றோர் உதவியுடன் ஆவி காளப்பட்டியில் உள்ள துணை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். மேலும் இது தொடர்பாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் அளிக்கப்பட்டு வந்த ஆம்புலன்ஸில் 5 பேர் இலுப்பூர் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
மருத்துவமனைகளில் 15 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட பின்பு அனைவரும் வீடு திரும்பினர். இந்நிலையில் பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட மாணவ, மாணவிகளுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக தகவல் அறிந்த பெற்றோர் மற்றும் கிராம மக்கள் பள்ளி முன் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பார்த்து அவர்களுக்கு ஏதும் பிரச்சனை இருக்கின்றதா என்று கேட்டறிந்து வீட்டிற்கு அழைத்து சென்றனர். இந்நிலையில் சம்பவம் பற்றி தகவல் அறிந்த வளநாடு
மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் ரபீக் ராஜா தலைமையிலான மருத்துவக் குழுவினர் மற்றும் சுகாதாரத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சம்பவம் குறித்து கேட்டறிந்த பின் சத்துணவு சாப்பிட்ட மாணவ – மாணவிகளை பரிசோதனை செய்தனர்.
அத்தோடு சமையல் செய்த அறையில் உள்ள சுகாதாரம் குறித்தும் பார்வையிட்டனர். இதையடுத்து அங்கிருந்த பெற்றோர்களிடம் யாரும் அச்சப்பட தேவையில்லை. யாருக்கேனும் பாதிப்பு என்றால் உடனே அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு தயக்கமின்றி சென்று சிகிச்சை பெறலாம் என்று தெரிவித்தனர். இதுமட்டுமின்றி உணவு மற்றும் குடிநீர் மாதிரியை மருத்துவ மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் எடுத்துச் சென்றிருக்கின்றனர்.
இதற்கிடையில் சம்பவம் பற்றி தகவல் அறிந்த துவரங்குறிச்சி போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். முன்னதாக சமையல் அறையில் கரப்பான் பூச்சிகளை கட்டுப்படுத்த விஷம் கொண்ட சாக்பீஸ் (Hit) பயன்படுத்தப்பட்டிருப்பது தெரியவந்தது. தொடர் கண்காணிப்பில் சுகாதாரத்துறையினரும், மருத்துவமனையினரும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது .