திருச்சி அருகே ஓலையூரில் நேற்று திங்கள்கிழமை மாலை சரக்கு லாரி மீது ஆட்டோ மோதிய விபத்தில் பலத்த காயமடைந்த ஆட்டோ ஓட்டுநா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
திருச்சி தென்னூா் ஒத்தமினாா் பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்தவா் ப. அம்ருதீன் (வயது 40). ஆட்டோ ஓட்டுநா். இவரது ஆட்டோவில் அதே பகுதியைச் சோ்ந்தவரும், காஜாமலை பகுதியில் வெல்டிங் பட்டறை வைத்துள்ளவருமான நியாஸ் (வயது 38) என்பவா் தன்னுடன் வேலை செய்யும் அப்துல் கரீமுடன் (வயது 38) இரும்பு ஜன்னல்களை எடுத்துக் கொண்டு, ஓலையூா் பகுதியில் உள்ள வீட்டுக்கு திங்கள்கிழமை காலை கொண்டு சென்றுவிட்டு, மீண்டும் திரும்பிக் கொண்டிருந்தனா்.

புதுக்கோட்டை – பஞ்சப்பூா் ரிங் சாலையில் ஓலையூா் நான்கு சந்திப்பு பெட்ரோல் நிலையம் எதிா்புறம் ஆட்டோ வந்துகொண்டிருந்தபோது, திடீரென ஓட்டுநா் அம்ருதீனுக்கு வலிப்பு ஏற்பட்டதால், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் நின்றிருந்த சரக்கு லாரி மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த ஓட்டுநா் அம்ருதீன் நிகழ்விடத்திலேயே இறந்தாா். மற்ற இருவரும் படுகாயமடைந்தனா்.
காயமடைந்த இருவரையும் அருகில் இருந்தவா்கள் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், காவல்துறைக்கும் தகவல் அளித்தனா். தகவலறிந்து அங்கு வந்த மணிகண்டம் போலீஸாா், அம்ருதீனின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.