திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகராட்சியின் தலைவராக இருந்த டாக்டர் நிலோபர் கபில் 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று தொழிலாளர் நலத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார்.
கடந்த 5 ஆண்டுகள் அமைச்சராக இருந்த நிலோபர் கபிலுக்கு ,நடந்து முடிந்த (2021) சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட ‘சீட்’ வழங்கப்படவில்லை.
தேர்தலில் தனக்கு சீட் கிடைக்காமல் போனதற்கு வணிகவரித்துறை அமைச்சரும், ஜோலார்பேட்டை தொகுதியின் அதிமுக வேட்பாளருமான கே.சி.வீரமணிதான் காரணம் என நிலோபர் கபில் பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.
இந்நிலையில், தொழிலாளர் நலத்துறை அமைச்சராக நிலோபர் கபில் பதவி வகித்தபோது, தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி நிறையப் பேருக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக கோடிக்கணக்கான பணத்தை பெற்றுக்கொண்டு வேலை வாங்கித் தராமல் பணமோசடி செய்ததாக, சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் நிலோபர் கபிலின் உதவியாளர் பிரகாசம் கடந்த 3-ம் தேதி புகார் அளித்தார்.
இதனை தொடர்ந்து கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக அதிமுக கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நிலோபர் கபில் நீக்கப்படுவதாகவும், அதிமுகவினர் அவருடன் எந்தவித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என்றும் அதிமுக தலைமை அறிக்கை வெளியிட்டது.
இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில், வாணியம்பாடியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது;-
“அதிமுகவில் நான் உண்மையாக உழைத்தேன். 5 ஆண்டுகளாக சிறந்த அமைச்சராக செயல்பட்டேன். தேர்தலில் போட்டியிட எனக்கு வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில், மனு தாக்கலுக்கு கூட என்னை அழைக்கவில்லை.
இருப்பினும் எனது சொந்த விருப்பத்துடன், கட்சியின் அடிப்படை உறுப்பினர் என்ற அடிப்படையில் அதிமுக வேட்பாளர் செந்தில் குமார் வெற்றி பெற வாக்கு சேகரித்தேன். திருப்பத்தூரில் உள்ள 4 தொகுதிகளில் வாணியம்பாடி தொகுதியில் மட்டும் தான் அதிமுக வெற்றி பெற்றது. நான் செய்த பிரச்சாரங்கள் மற்றும் திட்டங்களால் தான் அங்கு அதிமுக வெற்றி பெற்றது.
மேலும் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்த நலத்திட்டங்களும் வாணியம்பாடியில் சீராக கொண்டு சேர்க்கப்பட்டது. என்னை நம்பி தரப்பட்ட அமைச்சர் பதவிக்காக நான் சிறப்பாக செயல்பட்டேன்.”
இவ்வாறு அவர் கூறினார்.