மைனர் பெண்ணை காதலித்து திருமணம் செய்து போக்சோ சட்டத்தில் சிறைச்சென்று திரும்பிய வாலிபரின் நிலை …. இன்றைய இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது .
18 வயது நிறைவு பெறாத மைனர் பெண்ணை காதலித்து திருமணம் செய்த பலர் இப்போது கைதாகி சிறையில் இருக்கிறார்கள்.
இதேபோல் 18 வயது நிறைவடையாத பெண்ணை காதலித்து அத்துமீறியவர்களும் சிறையில் தான் இருக்கிறார்கள். பெண்ணுக்கு 16 வயது,17 வயது என்றும், ஆணுக்கு 21 வயது என்றும் இருக்கும் போது, அவர்களுக்குள் நடக்கும் காதல்கள், கடைசியில் போக்சோவில் தான் முடிகிறது. அப்படி காதலித்து திருமணம் செய்த ஊட்டி இளைஞர், சிறைக்கு போனார். ஆனால் காதலிக்கு 18 வயதில் ஒருவருடன் திருமணம் நடந்துள்ளது.
அதை தாங்க முடியாமல் அவர் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பருவ வயது காதல்கள் பொதுவாகவே மிகவும் சிக்கலானது. பெற்றோர்கள் எதிர்த்தாலும், உறவினர்கள் எதிர்த்தாலும், ஆசிரியர்கள் எதிர்த்தாலும் கண்டு கொள்வது இல்லை. இனகவர்ச்சியை காதல் என்று நம்பி பல டீன் ஏஜ் பெண்கள் காதலில் விழுகிறார்கள். ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் இருவரும் அத்துமீறி விடுகிறார்கள். பின்னர் இவர்கள் வாழ்ந்தால் உன்னோடு தான். இல்லையேல் மண்ணோடு தான் என்று யோசிக்கிறார்கள. வருமானம் எப்படி வரும், குழந்தைகளை எப்படி வளர்ப்பது. உறவுகளை எப்படி கையாள வேண்டும்.
வருமானத்தை உருவாக்குவது எப்படி, கல்வியில் உயர்ந்து, எதிர்காலத்தை எப்படி மாற்றுவது யோசிக்க வேண்டியதை அடியோடு மறக்கிறார்கள். காதலியை அல்லது காதலனை கரம்பிடிப்பது தான் லட்சியம் என்று மாறுகிறார்கள். எந்த நேரமும் காதலன் அல்லது காதலி பற்றியே நினைக்கிறார்கள்
ஒரு கட்டத்தில் நண்பர்கள் உதவியுடன் ஓடிப்போய் எங்காவது திருமணம் செய்கிறார்கள். திருமணம் செய்து ஒரு மாதம் அல்லது இரண்டு மாதம் கழித்து சொந்த ஊருக்கு வருகிறார்கள். ஆனால் அதில் பெண்ணுக்கு பெரும்பாலும் 18 வயதாக இருப்பது இல்லை.. பையனுக்கும் 19 அல்லது 20 வயது தான் இருக்கும். வாழ்க்கையில் எதிர்காலம் பற்றி முடிவெடுக்காமல், காதல், கல்யாணம் என்று செல்வதால், சரியான படிப்பு அல்லது வேலை கிடைப்பது இல்லை..
பெண்ணுக்கு 18 வயது நிறைவடையாத காரணத்தால், மைனர் பெண்ணை திருமணம் செய்து அத்துமீறிய குற்றத்திற்காக போக்சோவில் கைதாகி விடுகிறார். அவர் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வரவே சில வருடங்கள் ஆகிவிடும். அப்படி சென்று வந்த பின்னர், அரசு வேலைக்கு போக முடியாது. வெளிநாடும் போக முடியாது என்கிற நிலை வரும். வழக்கு, வாய்தா என்று அலைய வேண்டியதிருக்கும்.. இந்த சூழலுக்கு நடுவே காதலிக்கு 18 வயது முடிந்த உடன் வேறு ஒருவருடன் திருமணமும் நடந்துவிடும். அந்த பெண்ணுக்கு இழப்பீடும் அரசு சார்பில் வழங்கப்பட்டு விடும். ஆனால் காதலித்து திருமணம் செய்த இளைஞர், கடைசி வரை கோர்ட் கேஸ் என்று அலைய வேண்டிய நிலை இருக்கும்.. இது எதார்த்தமான நடைமுறையாக உள்ளது. 18வயது நிறைவடையாத பெண்ணை காதலித்து அத்து மீறுவதும், திருமணம் செய்வதும் பெரிய குற்றம் ஆகும். இதில் தான் இன்றைய 2 கே கிட்ஸ் இளைஞர்கள் சிக்கி வாழ்க்கையை தொலைக்கிறார்கள். ஊட்டி இளைஞருக்கு நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.
நீலகிரி மாவட்டம் ஊட்டி அன்பு அண்ணா காலனியை சேர்ந்தவர் உதயகுமார் இவரது மகன் மகன் பன்னீர்செல்வத்துக்கு (வயது 24) .இவர் அந்த பகுதியில் கூலி தொழிலாளியாக வேலைகள் செய்து வந்தார். இவர் கடந்த 2021-ம் ஆண்டு நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்த ஒரு சிறுமியை காதலித்து கல்யாணம் செய்து கொண்டார். இதுகுறித்து ஊட்டி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் பன்னீர்செல்வத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர், சிறையில் இருந்து 3 ஆண்டுகளுக்கு பிறகு சில நாட்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்தார். இந்நிலையில் அவர் காதலித்து திருமணம் செய்த சிறுமி 18 வயதை தாண்டிய நிலையில் வேறு ஒருவருடன் திருமணம் ஆகிவிட்டது. இதை கேள்விப்பட்டு மனவேதனை அடைந்த பன்னீர்செல்வம் கடந்த 7-ந் தேதி விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஊட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி பன்னீர்செல்வம் நேற்று முன்தினம் பரிதாபமாக உயிர் இழந்தார் .
இன்றைக்கு பல 2கே கிட்ஸ் இளைஞர்கள் படிக்க வேண்டிய வயதில் காதல் வலையில் விழுந்து, கடைசியில் வாழ்க்கையை தொலைத்து வருகிறார்கள்.
18 வயது நிறைவடையாத மைனர் சிறுமிகளை காதலித்து திருமணம் செய்து வாழ்க்கையை தொலைப்பது அண்மை காலத்தில் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது .