திருச்சி சமயபுரம் ராமகிருஷ்ணன் கல்லூரி மாணவன் தற்கொலை முயற்சி.வகுப்பறையில் செல்போன் பயன்படுத்தியதை பேராசிரியர் கண்டித்ததால் அவரின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டும் நடந்த விபரீதம்.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி தாலுகா கட்டக்குடி பகுதியில் சேர்ந்தவர் தரணிதரன் (வயது18). இவர், திருச்சி மாவட்டம், சமயபுரம் சுங்க சாவடி அருகில் உள்ள கே.ராமகிருஷ்ணா இன்ஜினியரிங் ஆப் டெக்னாலஜி கல்லூரியில் சிவில் பிரிவில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
கல்லூரி விடுதியில் தங்கி படித்து வருகிறார்.
நேற்று வழக்கம்போல கல்லூரி செயல்பட்டுக் கொண்டிருந்தது. மாலை கல்லூரி விடும் நேரத்தில் கணினி பேராசிரியை டேட்டா எண்ட்ரி குறித்து பாடம் எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது வகுப்பறையில் இருந்த மணாவர் ஒருவர் தவறாக டேட்டா எண்ட்ரி செய்ததாகவும், அதனை கவனித்த பேராசிரியை அந்த மாணவனை கண்டித்தபோது தரணிதரன் தனது செல்போனில் வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது.
இதனை பார்த்த பேராசிரியை தன்னை தவறாக சித்தரிக்கும் வகையில் வீடியோ எடுப்பதாக எண்ணி கடுமையான வார்த்தைகளால் தரணிதரனை வசைப்பாடியுள்ளார். அப்போது தரணிதரன் பேராசிரியையின் காலில் இரண்டு முறை விழுந்து மன்னிப்பு கேட்டும் அதனை ஏற்க மறுத்த பேராசிரியை அந்த மாணவனின் செல்போன் மற்றும் கல்லூரி அடையாள அட்டை ஆகியவற்றை பறித்ததாக கூறப்படுகிறது. கல்லூரி முதல்வரிடம் இதுகுறித்து புகார் அளித்து கல்லூரியில் இருந்து நீக்கம் செய்வதாக கூறி மிரட்டிவிட்டு அங்கிருந்து சென்றார்.

இந்நிலையில் சக மாணவர்கள் முன்னிலையில் நடந்த இந்த சம்பவத்தால் மனமுடைந்த தரணிதரன் திடீரென்று கல்லூரியின் 4வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார். இந்த சம்பவத்தில் உடலில் பலத்த காயம் அடைந்த மாணவனை சக மாணவர்கள் மீட்டு இருங்களூரில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் மாணவன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் முதல் கட்ட தகவலின் படி மாணவனின் முதுகு தண்டுவடத்தில் நான்கு எலும்புகளில் முறிவு ஏற்பட்டு அபாய கட்டத்தில் இருப்பதாக தெரிவித்தார்.இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சமயபுரம் போலீசார் தரணிதரன் வகுப்பில் படிக்கும் சக மாணவர்கள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் இடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த சம்பவம் குறித்து கல்லூரி நிர்வாகம் மாணவனின் தாயாருக்கு தகவல் தெரிவித்தனர். இதை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மாணவனின் தாயார் கதறி அழுத சம்பவம் பார்ப்போரை கண்கலங்க வைத்தது.
மேலும் அவரது தாயார் தனது மகனை உயர் சிகிச்சைக்கு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் எனக் கூறியதை அடுத்து மாணவனை ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தரணிதரன் தாயார் அளித்த புகாரின் பேரில் சமயபுரம் காவல் நிலையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து மேற்கொண்டு வருகின்றனர்.