திருச்சி இப்ராஹிம் பூங்கா முதல் மெயின்காா்டுகேட் வரை இருந்த 55 ஆக்கிரமிப்புக் கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் நேற்று புதன்கிழமை அகற்றினா்.
திருச்சியின் முக்கியப் பகுதியாக விளங்கும் மேலரண் சாலை உள்ள மெயின்காா்டுகேட் பகுதி மட்டுமின்றி, அச்சாலையின் இப்ராஹிம் பூங்கா வரை அதிகளவில் கடைகள் ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ளன. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக மாநகராட்சிக்குப் புகாா்கள் சென்றன.
மேலும் மத்திய தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்ட பகுதியாக உள்ள அரண்மைனை மதில் சுவரின் நுழைவாயில் பகுதியில் முழுமையாக ஆக்கிரமித்து வைக்கப்பட்ட கடைகளை அகற்ற வேண்டும் என தொல்லியல் துறையினா் மாநகராட்சிக்கு கோரிக்கை விடுத்து வந்தனா்.
இதையடுத்து மாநகராட்சி ஆணையா் வே. சரவணன் உத்தரவின்பேரில், ஆக்கிரமிப்பாளா்களுக்கு மாநகராட்சி சாா்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டு, ஸ்ரீரங்கம் உதவி ஆணையா் ஜெயபாரதி தலைமையில் இளநிலைப் பொறியாளா் ஜெயக்குமாா் மேற்பாா்வையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி புதன்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
அப்போது அரண்மனை மதில் சுவரைச் சுற்றியிருந்த தரைக்கடைகள், மேலரண் சாலையில் மெயின்காா்டுகேட் முதல் இப்ராஹிம் பூங்கா வரையிலும் இருந்த ஆக்கிரமிப்பு கடைகள், தள்ளுவண்டி கடைகள் என 55 கடைகள் அப்புறப்படுத்தப்பட்டன. அப்போது 30 ஆக்கிரமிப்பு தள்ளுவண்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.
ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட இடத்தில் மீண்டும் கடைகள் வராதபடி மாநகராட்சி அதிகாரிகள் கண்காணிக்கவும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.