புதுக்கோட்டை மாவட்டம் மண்டையூர் சோதிராயன்காடு பகுதியை சேர்ந்தவர்கள் சித்திரகுமார் – ஜீவிதா தம்பதி. இவர்களூக்கு மணிகண்டன் (வயது 18) என்ற மகனும் பவித்ரா(வயது 16) என்ற மகளும் இருந்தனர். ஐடிஐ வரை படித்துள்ள மணிகண்டன் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்துள்ளார். சிறுமி பவித்ரா 11-ம் வகுப்பு படித்து வருகிறார்.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் அருகில் உள்ள தனியாருக்கு சொந்தமான இடத்தை சித்திரகுமார் பராமரித்து வருகிறார். இதனால் குடும்பத்துடன் அங்கு தங்கி உள்ளார். 11-ம் வகுப்பு படித்து வரும் பவித்ரா இந்தாண்டு பொதுத்தேர்வு எழுத உள்ளார். மார்ச் 5-ம் தேதி முதல் 11-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு தொடங்க உள்ளது. தேர்வுக்கு இன்னும் சில நாட்களே இருப்பதால் சிறுமியை படிக்குமாறு குடும்பத்தினர் கூறி வந்துள்ளார்.
சிறுமியோ இரவு நேரங்களில் செல்போனில் ரீல்ஸ் பார்ப்பது, தோழிகளுடன் பேசுவது என இருந்து வந்துள்ளார். இதனை அவரது பெற்றோர்கள் கண்டித்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு சிறுமி படிக்காமல் செல்போன் பார்த்து வந்ததாக தெரிகிறது. இதனை அவரது பெற்றோர்கள் கண்டித்துள்ளனர். சிறுமியின் அண்ணன் மணிகண்டன் சிறுமியிடன் இருந்து செல்போன் பறித்து வைத்துக்கொண்டு உறங்க செல்லுமாறு கூறியுள்ளார்.
இதனால் அண்ணன் – தங்கை இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த செல்போன் இருந்தால் தானே நீ பார்ப்பாய் என ஆத்திரத்தில் அந்த செல்போன் தூக்கி தரையில் போட்டு உடைத்துள்ளார் மணிகண்டன்.
இதனைக்கண்டு ஆத்திரமடைந்த சிறுமி தான் தங்கியிருந்த இடத்தின் அருகில் இருந்த கிணற்றில் ஓடிச்சென்று குதித்துள்ளார். சிறுமி கிணற்றில் குதித்ததையடுத்து மணிகண்டன் தங்கையை காப்பாற்றுவதற்காக கிணற்றில் குதித்துள்ளார். இரவு நேரம் என்பதால் கிணற்றுக்குள் போதிய வெளிச்சம் இல்லை. கிணற்றுக்கு மேலே செய்வதியாமல் நின்ற அவரது பெற்றோர்கள் கூச்சலிட்டுள்ளனர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதிக்கு விரைந்த பொதுமக்கள் கிணற்றில் பார்த்துள்ளனர். இரவு நேரம் என்பதால் வெளிச்சம் இல்லை உடனடியாக காவல்துறைக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் மின் விளக்குகளின் உதவியுடன் கிணற்றில் இறங்கி இருவரையும் தேடினர். நீண்ட நேரத்துக்கு பிறகு இருவரும் சடலமாக மீட்கப்பட்டனர். இருவரின் உடல்களை பிரேத பரிசோதனைக்கு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். செல்போனினால் அண்ணன் தங்கை உயிரிழந்த இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.