மும்முனை மின் இணைப்புக்கான மீட்டர் வழங்க ரு.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய உதவி செயற்பொறியாளர் மற்றும் உதவியாளர் கைது.திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் அதிரடி.
திருச்சியில் மும்முனை மின் இணைப்புக்கான மீட்டர் வழங்க ரு.10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய மின்வாரிய உதவி செயற்பொறியாளர் மற்றும் அவர் தனிப்பட்ட உதவியாளரை கைது செய்த திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார்.
திருச்சி கே.கே.நகர் இந்திராகாந்தி தெருவைச் சேர்ந்த சீனிவாசன். இவர், திருச்சி கே.கே.நகரில் தனது பெயரில் இறகுப்பந்து மைதானம் (பேட்மிட்டன் கோர்ட்) அமைப்பதற்கு மும்முனை மின்சார இணைப்பு வேண்டி விண்ணப்பித்து இருந்தார். மின் இணைப்பு கிடைத்தும், அதற்குரிய மீட்டர் கிடைக்காத சீனிவாசன், கே.கே.நகர் தென்றல் நகரில் உள்ள உதவி செயற்பொறியாளர் சந்திரசேகர் (வயது 58) என்பவரை அணுகியபோது அவர் 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டார்.

அதன் தொடர்ச்சியாக இன்று (17-ம் தேதி) சீனிவாசன் கொடுத்த புகாரின் பேரில், திருச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் வழக்குப் பதிவுச் செய்தனர். துணை கண்காணிப்பாளர் மணிகண்டன் தலைமையில், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு அலுவலர்களால் ‘பொறிவைப்பு’ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அப்போது, சீனிவாசனிடம் இருந்து உதவி செயற்பொறியாளர் சந்திரசேகர் லஞ்சப்பணம் 10 ஆயிரம் ரூபாயை பெற்றுக் கொண்டார். அந்த பணத்தை தனது தனிப்பட்ட (பிரைவேட்) உதவியாளர் கிருஷ்ணமூர்த்தி, (வயது 34) என்பவரிடம் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர், பணத்தை கிருஷ்ணமூர்த்தி வைத்திருந்த போது கையும் களவுமாக பிடித்தனர். இருவரையும் கைது செய்தனர்.
மேலும், கே.கே.நகர் மின்சார வாரிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் தொடர்ந்து சோதனை மற்றும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.