புதுச்சேரி மாநிலத்தில் இருந்து உடல் முழுவதும் செலோ டேப் கொண்டு ஒட்டி மதுபாட்டில்களை விழுப்புரம் நபர் ஒருவர் கடத்தி வந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் அவரை மடக்கிப் பிடித்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர்.
புதுச்சேரியில் மதுபானங்களின் விலை குறைவு என்பதால், அதனை ஒட்டியுள்ள பகுதிகள், பல்வேறு மாவட்டங்களில் இருந்து பலரும் புதுச்சேரிக்குச் சென்று மது பாட்டில்களை வாங்குவது வழக்கம். தமிழகத்தை ஒப்பிடும்போது புதுச்சேரியில் மதுபானங்களின் விலை மிகவும் குறைவு. இதனால், விழுப்புரம், கடலூர், திண்டிவனம் உள்ளிட்ட பகுதிகலைச் சேர்ந்தோர் அங்கு மதுபாட்டில்களை வாங்கி கடத்தி தமிழகத்தில் அதிக விலைக்கு விற்று வரும் சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், புதுச்சேரி மாநிலத்தின் மது பாட்டில்களை உடல் முழுவதும் செலோ டேப் கொண்டு ஒட்டி கடத்தி வந்த நரை போலீஸார் விழுப்புரத்தில் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் பழைய பேருந்து நிலையப் பகுதியில் தனிப்படை உதவி ஆய்வாளர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது, அங்கு சந்தேகப்படும்படியான நபர் ஒருவர் சென்று கொண்டிருந்துள்ளார். அவரைப் பிடித்து விசாரணை நடத்தியபோது முன்னுக்குப் பின் முரணாகப் பேசியுள்ளார். இதையடுத்து, அந்த நபரை மதுவிலக்கு அமல் பிரிவுக் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு அந்த நபரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், விழுப்புரம் மாவட்டம், ஜிஆர்பி தெருவைச் சேர்ந்த நாகமணி (வயது 40) என்பது தெரியவந்தது. அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் 90 மில்லி கொண்ட 100 மதுபாட்டில்கள் மற்றும் 150 மில்லி கொண்ட 25 மதுபாட்டில்களை அந்த நபர் வைத்திருப்பது தெரியவந்தது.
நாகமணி சட்டையை கழற்றியபோது, அவர் உடல் முழுவதும் கிட்டத்தட்ட 150 மது பாட்டில்கள் ஒட்டப்பட்டிருப்பதை கண்டு போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர்.
புதுச்சேரி மாநிலத்தில் இருந்து மது பாட்டில்களை வாங்கி உடல் முழுவதும் ஒட்டிக் கொண்டு பேருந்து மூலமாக விழுப்புரத்துக்கு எடுத்து வந்துள்ளார்.
இதையடுத்து, அவரிடமிருந்து 150 பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இச்சம்பவம் தொடர்பாக நாகமணியை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.