திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுற்றித் திரிந்த நாயை, மாநகராட்சி ஊழியர் ஒருவர் அடித்துக் கொல்ல முயன்ற சம்பவம், ஆட்சியர் அலுவலகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 20-க்கும் மேற்பட்ட நாய்கள் சுற்றித் திரிகின்றன. தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் இங்கு வந்து செல்லும் நிலையில் இந்த நாய்கள் யாருக்கும் எந்த தொந்தரவும் தருவது இல்லை. இதுவரை யாரையும் கடித்ததாக புகார் கூட இல்லை. இந்நிலையில், திருச்சி மாநகராட்சி ஊழியர்கள் ஒரு குழுவாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (பிப்.15) காலை துப்புரவு பணிக்காக வந்திருந்தனர்.

அப்போது அந்த குழுவில் இருந்த தொழிலாளி ஒருவர், திருச்சி மாவட்ட செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை அலுவலக நுழைவாயில் நின்று கொண்டிருந்த ஒரு நாயை இரும்பு தடியால் ஓங்கி அடித்தார். இதனால் அந்த நாயின் தாடை கிழிந்து ரத்தம் கொட்டியது. அதன் அலறல் சத்தத்தை கேட்டு அலுவலகத்தில் இருந்தவர்கள் எல்லாம் ஓடி வந்தனர். அந்த நாய் உயிருக்கு போராடுவதைப் பற்றி சற்றும் கவலைப்படாத அந்த ஊழியர், நாயை தூக்கி ஓரமாக வீசி எறிந்தார்.
எவ்வித குற்ற உணர்வும் இல்லாமல், தண்ணீரை ஊற்றி நாயின் ரத்தத்தை கழுவிக் கொண்டிருந்தார். இதுபோன்று ஏன் செய்தீர்கள்? என்று கேட்டதற்கு, ‘தெரியாமல் செய்துவிட்டேன். இதை போய் பெரிய பிரச்சினையாக்காதீர்கள்’ என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றார். அந்த நபர், திருச்சி மாநகராட்சியில் துப்புரவுப் பணியாளராக பணியாற்றும் சங்கர் என கூறப்படுகிறது.
தமிழகத்தில் நாய்களைப் பிடிப்பதற்கான கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன ,
இதில் திருச்சி மாநகராட்சிப் பகுதிகளில் சுற்றித் திரியும் தெருநாய்களை பிடிப்பதற்கு என்று பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
நான்கு இடங்களில் கருத்தடை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தெருநாய்களை வலை போட்டுதான் பிடிக்க வேண்டும் என்பது போன்ற கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளன.அதன் அடிப்படையில்தான் நாய் பிடிக்கும் ஊழியர்கள் நாய்களைப் பிடித்து கருத்தடை செய்து, மீண்டும் நாய்கள் வசித்த அதே இடத்தில் கொண்டு சென்று விடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.ஆனால் இதையும் மீறி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாநகராட்சி ஊழியர் நடந்து கொண்ட விதம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துள்ளது .
மேலும் தற்போது திருச்சி மாநகராட்சி சார்பில் நாய்களை பிடிக்க ஒப்பந்த அடிப்படையில் பல வட இந்திய வாலிபர்கள் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது .