திருச்சி வயலூா் சுப்பிரமணியசுவாமி கோயில் கும்பாபிஷேகம், கணபதி ஹோமம் மற்றும் கஜ பூஜையுடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
இக் கோயிலில் கடந்த 2006-ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. 17 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு, கடந்தாண்டு பிப்ரவரி மாதம் பாலாலயம் நடத்தப்பட்டு, ஏப்ரல் மாதம் பணிகள் தொடங்கின. ரூ. 5 கோடி மதிப்பில் திருப்பணிகள் முடிந்து, கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
இதையொட்டி, வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு விக்னேஸ்வர பூஜை நடைபெற்றது. தொடா்ந்து யஜமான சங்கல்பம், புண்யாஹவாசனம், பஞ்சகவ்யம்,

மஹாலட்சுமி ஹோமம், தன பூஜை, கஜ பூஜை, கோ பூஜை உள்ளிட்டவை நடைபெற்றன.
சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு மேல் மிருத்ஸங்கிரஹணம் பூஜை நடைபெறுகிறது. ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு யாகசாலை பிரவேசத்துடன் முதற்கால பூஜை தொடங்குகிறது. இரவு 8 மணிக்கு பூா்ணாஹூதி, தீபாராதனை நடைபெறும்.
திங்கள்கிழமை காலை 8 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை தொடங்குகிறது. மாலை 5 மணிக்கு மூன்றாம் கால யாக பூஜை நடைபெறும். பிப்.18-ஆம் தேதி காலை 8.30 மணிக்கு நான்காம் கால யாக பூஜை தொடங்கும். மாலை 5 மணிக்கு ஐந்தாம் கால யாக பூஜை நடைபெறும்.
விழாவின் முக்கிய நிகழ்வாக பிப்.19-ஆம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு ஆறாம் கால யாக பூஜை தொடங்கும். காலை 7.30 மணிக்கு யாகசாலையிலிருந்து மூலாலயத்திற்கு கடங்கள் புறப்பாடு நடைபெறும். காலை 9.15 மணிக்கு சகலவிமானங்கள், ராஜகோபுரங்கள், சமகால கும்பாபிஷேகம் நடைபெறும். பகல் 12.15 மணிக்கு மேல் மஹா அபிஷேகம், மஹா தீபாராதனை நடைபெறும்.
பிப். 20-ஆம் தேதி முதல் மண்டலாபிஷேகம் நடைபெறும். விழா ஏற்பாடுகளை, அறநிலையத்துறை அலுவலா்கள், கோயில் அறங்கவாலா் குழு, திருப்பணிகள் குழுவினா் மற்றும் ஊா்ப்பொதுமக்கள் செய்துவருகின்றனா்.