Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

பெண் எஸ்ஐ விசிகவினரால் தாக்கப்படவில்லை. எடப்பாடி பழனிச்சாமி கண்டனத்துக்கு பின் போலீசார் விளக்கம் .

0

'- Advertisement -

சிவகங்கையில் விசிகவினரால், பெண் எஸ்ஐ தாக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு பொய்யானது மற்றும் மிகைப்படுத்தப்பட்டது எனவும் சிவகங்கை மாவட்ட காவல்துறையினர் விளக்கம் அளித்துள்ளனர்.

பிரணிதா மீது பொதுமக்களின் சார்பாக தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு பலமுறை எச்சரிக்கப்பட்ட நிலையில், அவர் பொய் புகார் அளித்துள்ளதாகவும், இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகவும் மாவட்ட காவல்துறை கூறியுள்ளது.

வழக்கு ஒன்றின் விசாரணைக்காக சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள சோமநாதபுரம் காவல் நிலையத்திற்கு வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த இளைய கவுதமன் உள்ளிட்ட சிலர் தன்னை தாக்கியதாக அந்த காவல் நிலையத்தில் எஸ்ஐயாக பணிபுரிந்த பிரணிதா பரபரப்பு புகார் கூறினார்.

மேலும் தன்னை கத்தி உள்ளிட்டவற்றால் கீறியதாக காரைக்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் சேர்க்கப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி நிலைவில் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் கடுமையான கண்டனங்களை தெரிவித்தனர்.

இந்நிலையில், சிவகங்கையில் விசிகவினரால், பெண் எஸ்ஐ தாக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு பொய்யானது மற்றும் மிகைப்படுத்தப்பட்டது எனவும் சிவகங்கை மாவட்ட காவல்துறையினர் விளக்கம் அளித்துள்ளனர். இதுதொடர்பாக வெளியாகியுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- இளையகௌதமன் உட்பட சிலர் சோமநாதபுரம் காவல் நிலையத்தில் தன்னைத் தாக்கியதாக பெண் உதவி ஆய்வாளர் பிரணிதா கூறும் குற்றச்சாட்டு தொடர்பாக ஒரு செய்தி பரவி வருகிறது.

Suresh

இது தொடர்பாக, சார்பு ஆய்வாளர் கூறிய குற்றச்சாட்டுகள் தொடர்பாக, முதற்கட்ட விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில், நிலையத்தின் சிசிடிவி கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டு, மேலும் நிலையத்தில் இருந்த காவல்துறையினர் மற்றும் மருத்துவமனையில் உள்ள மருத்துவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையின் அடிப்படையில், சார்பு ஆய்வாளர் தாக்கப்பட்டதாக கூறிய குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது மற்றும் மிகைப்படுத்தப்பட்டது என தெரிய வருகிறது.

கடந்த 05.05.2025 அன்று மாலை, அமராவதிபுதூர் கிராமத்தில் உள்ள கோயில் நிலத் தகராறு தொடர்பாக இரு பிரிவினர் சோமநாதபுரம் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக வந்திருந்தனர். அது குறித்து சப் இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் என்பவர் விசாரணை மேற்கொண்டார்.

அந்த நேரத்தில், வாகன சோதனைக்குப் பிறகு பெண் சப் இன்ஸ்பெக்டர் பிரணிதா நிலையத்திற்கு வந்து, மேற்படி SI.திரு.முத்துகிருஷ்ணனின் விசாரணையில் தலையிட்டார். விசாரணைக்கு வந்திருந்த ஒரு பிரிவினர் ஆட்சேபனை தெரிவித்தனர். அதனைத்தொடர்ந்து, மேலும் பெண் சப் இன்ஸ்பெக்டர் பிரணிதாவிற்கும், கிராமத்தினருடன் வந்திருந்த அமராவதிபுதூரைச்சேர்ந்த இளையகௌதமன் என்பவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னர் அதனைத்தொடர்ந்து, விசாரணைக்கு வந்திருந்த கிராமத்தினர் கலைந்து சென்றனர். சார்பு ஆய்வாளர் ஒரு தனியார் மருத்துவமனையிலும், தொடர்ந்து காரைக்குடி அரசு மருத்துவமனையிலும் 10 பேர் அவரைத் தாக்கியதாகக் கூறி சிகிச்சைக்கு சேர்ந்தார். அங்கிருந்த மருத்துவர் அவரைப் பரிசோதித்து, அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், உள்நோயாளியாக அனுமதிக்கத் தேவையில்லை என்றும் கூறினார். இருப்பினும், அவர் மறுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தார். அதே நேரத்தில் அவரது குடும்ப உறுப்பினர்கள் மூலமாக பத்திரிக்கைகளுக்கு இது தொடர்பான செய்தியை தெரிவித்துள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டு பொய்யானது மற்றும் மிகைப்படுத்தப்பட்டது என்பது தெரியவருகிறது. முன்னதாக, இந்த பெண் சப் இன்ஸ்பெக்டர் பிரணிதா மீது பொதுமக்களின் சார்பாக தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு பலமுறை எச்சரிக்கப்பட்டுள்ளார்.

சமீபத்தில், கடந்த 18.11.2024ம் தேதி நிர்வாக குற்றச்சாட்டு காரணமாக, அவர் சோமநாதபுரம் காவல் நிலையத்திலிருந்து சிவகங்கை நகர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டார். இருப்பினும், அவர் தனது பணிமாறுதல் செய்யப்பட்ட காவல் நிலையத்திற்கு பணிக்கு அறிக்கை செய்யாமல் 30.11.2024 முதல் 16.1.2025 வரை 48 நாட்கள் மருத்துவ விடுப்பில் இருந்தவர், தொடர்ந்து சோமநாதபுரம் காவல் நிலையத்திலேயே பணிபுரிந்து வருகிறார்.

பெண்கள் மற்றும் பெண் காவலர்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக பெறப்படும் புகார்கள் மீது தனிக்கவனம் செலுத்தப்பட்டு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தக் குற்றச்சாட்டு பொய்யானது மற்றும் மிகைப்படுத்தப்பட்டது என்பது மீண்டும் தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும் விரிவான விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.” என கூறப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.