அரசு உதவி பெறும் திருச்சி கி.ஆ.பெ. பள்ளி வளாகத்தில் செயல்படும் வெள்ளாளர் சாதிய அலுவலகம். நிர்வாகம் பதிலளிக்க ஹைகோர்ட் உத்தரவு .
திருச்சி கி.ஆ.பெ. விஸ்வநாதன் பள்ளிவளாகத்தில் வெள்ளாளர் கூட்டமைப்பு அலுவலகம் செயல்படுவது தொடர்பான மனுவுக்கு பள்ளி நிர்வாகம் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருச்சி அரியாவூரைச் சேர்ந்த கணேசன் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது :-
திருச்சி தில்லை நகரில் கி.ஆ.பெ விஸ்வநாதன் உயர்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. சமூகம் மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கி வகுப்பைச் சேர்ந்த குழந்தைகள் இங்கு கல்வி பயின்று வருகின்றனர்.
40 ஆண்டுகளுக்கு மேலாக அரசு உதவி பெறும் பள்ளியாக இப்பள்ளி இயங்கி வருகிறது.
தற்போதைய பள்ளி நிர்வாகம் பள்ளி வளாகத்தில் தங்களது வெள்ளாளர் சாதி கூட்டமைப்பு அலுவலகத்தை தொடங்கி நடத்தி வருகிறது. இந்த சாதி சமூகத்தின் கொடி பள்ளி வளாகத்தில் பறக்க விடப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சமூகத்திற்கான திருமண தகவல் மையமும் பள்ளி வளாகத்தினுள் இயங்கி வருகிறது.
வெள்ளாளர் சமுதாய கூட்டமைப்பு தலைவர்கள் தொடர்பான போஸ்டர்கள், பேனர்கள் பள்ளி வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளன. இது மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் சாதிய மனோபாவத்தை உருவாக்கி வருகிறது.
பள்ளியில் சாதி மனோபாவத்தை உருவாக்கும் வகையில் செயல்படும் திருச்சி கி.ஆ.பெ. விஸ்வநாதன் உயர்நிலைப் பள்ளி நிர்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஏ. டி.மரிய கிளாட் அமர்வு, “மனு தொடர்பாக திருச்சி கி.ஆ.ப.விஸ்வநாதன் உயர்நிலைப்பள்ளி நிர்வாகம் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்துள்ளனர் .